அரசு கேபிள் டிவி மாதச் சந்தாக் கட்டணம் குறைப்பு: ஆகஸ்ட் 10 முதல் அமல் 

அரசு கேபிள் டிவி மாதச் சந்தாக் கட்டணம் குறைப்பு: ஆகஸ்ட் 10 முதல் அமல் 
Updated on
1 min read

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மாதச் சந்தாக் கட்டணம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனடிப்படையில் தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி முதல் ரூ.130 பிளஸ் ஜிஎஸ்டி என்பது மாதச் சந்தாக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு வருமாறு:

பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவையை பெறுவதற்காக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மே 2011-ல் ஜெயலலிதாவால் புத்துயிர் ஊட்டப்பட்டு சந்தாதாரர்களுக்கு மாதம் ரூபாய் 70/- என்ற மிக குறைந்த கட்டணத்தில் 100 சேனல்களை வழங்கி வந்தது.

கேபிள் டிவி ஒளிபரப்பை மக்கள் துல்லியமாக கண்டுகளிக்க ஏதுவாக, 17.4.2017 அன்று ஜெயலலிதா அரசின் தொடர் முயற்சியால் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்திடம் இருந்து டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்று, டிஜிட்டல் ஒளிபரப்பு முறையை 1.9.2017 அன்று நான் தொடங்கி வைத்தேன். 

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், இதுவரை 36 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்து, சுமார் 35.12 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. தற்பொழுது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பொதுமக்கள் அதிகம் விரும்பும் சேனல்களை வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜெயலலிதா அரசு, தமிழ்நாடு முழுவதும் (வேலூர் மாவட்டம் நீங்கலாக) வருகிற ஆகஸ்ட் 10, 2019 முதல் ரூபாய் 130 + ஜிஎஸ்டி என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்று அந்த அறிவிப்பில் முதல்வர் தெரிவித்துள்ளார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in