Published : 31 Jul 2019 07:55 PM
Last Updated : 31 Jul 2019 07:55 PM

அரசு மருத்துவர்களுக்கு குரூப்-1 அதிகாரிகள் அளவுக்கு சம்பளம்: பரிசீலிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

அரசு மருத்துவர்களின் ஊதியத்தை குரூப்-1 அதிகாரிகள் சம்பளம் அளவுக்கு உயர்த்துவது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதற்கு தடை விதிக்க கோரி ஏ.கே.வேலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது அரசு மருத்துவர்கள் நோயாளிகளின் உறவினர்களால் தாக்கப்படுவது குறித்து  நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து , அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், அதுகுறித்து  பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பார்த்திபன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் வழக்கை தள்ளிவைக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அரசு மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்துவது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் அரசு கல்லூரி பேராசிரியர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு இணையாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாகவும், அரசு மருத்துவர்களின் ஊதியத்தை விட நீதிபதிகளின் உதவியாளர்களின் ஊதியம் அதிகம் என்றும் குரூப் 1 அதிகாரிகளுக்கு இணையாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும், போதிய ஊதியம் வழங்காததால்தான் தனியார் பல்நோக்கு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் செல்கிறார்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதேபோல, அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் இரண்டு மருத்துவர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் இதுகுறித்து இரண்டு வார காலத்திற்குள் அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x