

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தேர்தலில் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் அந்த வகையில் குடியாத்தத்தில் பிரச்சாரம் செய்த பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ''முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்டாயமாக 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ஒன்றுமில்லாமல், ஊருக்குள் யாருமே இல்லாமல், நடந்துபோனால் கூட யாரும் கேட்க மாட்டார்கள், அப்படி பட்டவர்களுக்கு கூட இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மக்கள் செல்வாக்கு உள்ள, மக்கள் தலைவராக இன்று உருவாகியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மூன்று மானியக் கோரிக்கைகளை சட்டப்பேரவையில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடத்திக் காட்டிய தலைவர் அவர். மக்களின் முதல்வர் என்று நிரூபித்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தேசியத்தையும் தெய்வீகத்தையும் நினைக்கக் கூடிய, அந்த வழியில் செல்லக்கூடிய அரசின் தலைவர்களுக்கு வலிமையான 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.