உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்: பாப்புலர் ஃப்ரண்ட் அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

உயர் கல்வியைப் பயில விரும்பும் ஏழை மற்றும் திறமையான மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கான அறிவிப்பை பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், "2019 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை இன்று டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் பிளஸ் 2  முடித்து உயர் கல்வியை பயில விரும்பும் ஏழை மற்றும் திறமையான மாணவர்களுக்கு உதவும்.

2019-2020 கல்வி ஆண்டுக்கான உதவித்தொகையைப் பெற தகுதியான மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்ந்து 9 ஆண்டுகளாக தேசிய அளவில் உயர் கல்விக்கான உதவித்தொகை வழங்கும் இந்த திட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் செயல்படுத்தி வருகின்றது.

ஒன்று அல்லது அதற்கு மேல் காலவரையறையுள்ள முதுகலைப் பட்டம், இளங்கலைப் பட்டம் மற்றும் டிப்ளமோ படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெறத் தகுதியானவர்கள். பத்திரிகைத் துறை, சட்டம் மற்றும் சமூகப் பணி போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். www.popularfrontindia.org என்ற இணையதள முகவரியில் ஜுலை 31-ம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31 ஆகும்.

உதவித்தொகை பெறும் மாணவர்கள் உயர்கல்வியை முடித்து, பணியில் சேர்ந்து பொறுப்புள்ள குடிமகன்களான பின் சமூகத்திற்கு பங்களிக்க வேண்டும்".

இவ்வாறு பாப்புலர் ஃப்ரண்ட் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in