ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிப்பதில் ஆளுக்கு ஏற்றார்போல் பாரபட்சம் ஏன்?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிப்பதில் ஆளுக்கு ஏற்றார்போல் பாரபட்சம் ஏன்?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
Updated on
2 min read

ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க தருமபுரி பேருந்து எரிப்பு கைதிக்கு ஒரு நியாயம், ராஜீவ் கொலைத் தண்டனை கைதிகளுக்கு ஒரு நியாயம் என்பதுபோல் நடைமுறை உள்ளது என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் இரணியன் அள்ளியைச் சேர்ந்த அமுதா மகன் செந்தில், தன் தந்தையைக் கொன்றவரை பழி தீர்ப்பதற்காக கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 1999 முதல் சேலம் மத்திய சிறையில் இருந்து வருகிறார். 

சிறையில் நன்னடத்தையுடனும், சக கைதிகளுக்கு யோகா பயிற்சியும் வழங்கி வரும் செந்திலை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி  விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி அவரது தாய் அமுதா ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அது நீதிபதி கிருபாகரன் அமர்வு முன் விசாரணையில் இருந்தது.

வழக்கில், அமுதாவின் கோரிக்கையை 6 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென சேலம் சிறைக் கண்காணிப்பாளருக்கு 2018 செப்டம்பரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என சேலம் சிறைக் கண்காணிப்பாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி முன்விடுதலை கோரும் மனுக்களை சிறை விதிகளுக்குட்பட்டு சிறை அதிகாரி பரிசீலித்து அவர் திருப்தி அடையும் பட்சத்தில் சிறைத்துறைத் தலைவருக்கு அனுப்புவார் என்றும், அது பின்னர் தமிழக உள்துறைக்கு அனுப்பப்பட்டு பிறகு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆனால், அரசின் பரிந்துரையை தன்னிச்சையாக ஆராயும் ஆளுநர் எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே விடுதலை முடிவு என்பது இருக்கும். யோகா செந்திலைப் பொறுத்தவரை முன் கூட்டி விடுதலை செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என தமிழக அரசு கருதியதால் தாய் அமுதாவின் மனு நிராகரிக்கப்பட்டதாகவும் விஜய் நாராயண் தெரிவித்தார்.

அதைக் கேட்ட நீதிபதிகள், கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் சிறையில்தான் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  இதுபோன்ற ஒவ்வொரு வழக்கிற்கும் அரசு வெவ்வேறு நிலைப்பாட்டை எடுப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர். 

குறிப்பாக தருமபுரி பேருந்து தீ வைப்பு சம்பவத்தில் மூன்று மாணவிகளை எரித்துக் கொன்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, அரசு அவர்களை முன் கூட்டி விடுதலை செய்திருப்பதையும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்க அரசு தீர்மானம் இயற்றியதையும் சுட்டிக்காட்டினர். ஆனால் யோகா செந்தில் போன்ற சந்தர்ப்பவசத்தால் குற்றம் புரிந்தவர்களை விடுவிப்பதில் கூட சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டுவதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.

10 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களை விடுவிக்க வேண்டுமென அரசு முடிவெடுத்தால் அதை அனைவருக்கும் சமமாகத்தானே இருக்க வேண்டும். ஆனால் ஏன் இப்படி ஒவ்வொரு வழக்கிற்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என காரணம் காட்டி அரசின் நிலைப்பாடு ஏன் மாறுபடுகிறது?  மேலும், அப்படி முடிவெடுக்க அரசியல் அழுத்தம் ஏதும் காரணமா? என நீதிபதிகள் கேட்டனர்.

வழக்கை நாளை உத்தரவுக்காக ஒத்திவைத்த நீதிபதிகள், யோகா செந்தில் விவகாரத்தில் அரசு மாற்று நிலைப்பாடு எடுக்கக் காரணம் என்ன? என விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in