

சென்னை
பெரும்பான்மை சமுதாயத்தை சிறுபான்மையினருக்கு எதிராக அணி திரட்டுகிற பாஜக, முத்தலாக் தடை மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கலாமா? என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,
"முத்தலாக் தடை மசோதா என்று அழைக்கப்படும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முஸ்லிம் மதத்தில் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால் அது கிரிமினல் குற்றமாகி, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெறுவதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.
இதேபோல, விவாகரத்து செய்யப்படும் இந்து அல்லது கிறிஸ்தவப் பெண்களின் கணவர்களுக்கு சிறை தண்டனை கொடுக்காத போது, முத்தலாக் சொல்லும் ஆண்களுக்கு மட்டும் சிறை தண்டனை கொடுப்பது நியாயம் தானா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. விவாகரத்து செய்யப்பட்ட பிறகு கணவன் சிறையில் அடைக்கப்பட்டால் மனைவியின் வாழ்வாதாரத்தை யார் பாதுகாப்பது ? இந்த கேள்விக்கு இதுவரை பாஜக பதில் கூறவில்லை.
முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வது மிக அதிகமாக முஸ்லிம்களிடையே நடைபெற்று வருவதாக பாஜகவினர் நியாயப்படுத்தி பேசுகிறார்கள். மனித உரிமை கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாக கூறி திருமணம் மற்றும் வாரிசு உரிமைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கு அந்த மதத்தினரின் ஒப்புதல் இல்லாமல் செய்வது மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானதாகும்.
நேரு வகுத்த மதச்சார்பற்ற கொள்கையின்படி, "நம்முடைய அரசாங்கம் ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம். எல்லா குழுவினருக்கும் சம வாய்ப்பு அளிக்கும். அரசாங்கம் எந்த வகையிலும் ஒரு குறிப்பிட்ட மதத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாது, அல்லது சேராது. எந்த சமயத்தையும் ஆதரிக்காது, அல்லது புறக்கணிக்காது. எந்த சமயத்திற்கும் கட்டுப்பாட்டை விதிக்காது" என்று கூறியதன் அடிப்படையில் தான் அரசமைப்புச்சட்டம் அனைத்து மதத்தினருக்கும் சுதந்திரம் வழங்கியிருக்கிறது. இந்த சுதந்திரத்தை குழிதோண்டி புதைக்கிற வகையில் தனது பெரும்பான்மை பலத்தின் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டத்தை பாஜக நிறைவேற்றியிருக்கிறது.
மக்களவையில் 2014 இல் 284 உறுப்பினர்களையும், 2019 இல் 303 உறுப்பினர்களையும் பெற்றிருக்கிற பாஜகவில் ஒருவர் கூட சிறுபான்மை சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் வழங்காத நிலையில் இஸ்லாமிய பெண்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு என்ன அருகதை இருக்கிறது?
இந்திய மக்கள் தொகையில் 15 சதவீதம் இருக்கிற இஸ்லாமியர்களுக்கு மக்களவையில் 27 உறுப்பினர்கள் தான் இருக்கிறார்கள். சிறுபான்மை சமுதாயத்தினர் நாடாளுமன்றத்தில் நுழையக் கூடாது என்பதை பதுங்கு திட்டமாக வைத்து பெரும்பான்மை சமுதாயத்தை சிறுபான்மையினருக்கு எதிராக அணி திரட்டுகிற பாஜக இஸ்லாமியர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கலாமா ?
இஸ்லாமிய மதத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டுமென பாஜக உண்மையிலேயே விரும்பினால் அந்த மதத்தை வழிநடத்துகிற அமைப்புகளின் ஒப்புதல் இல்லாமல் மசோதாவை கொண்டு வருவது ஜனநாயக விரோதச் செயலாகும்.
முத்தலாக் மசோதாவை மக்களவையில் அதிமுக ஆதரித்து வாக்களித்தது. ஆனால், மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்திருக்கிறது. இது எதிர்த்து வாக்களிப்பதை விட கொடுமையானதாகும். வெளிநடப்பு செய்வதன் மூலம் மறைமுகமாக பாஜகவுக்கு அதிமுக உதவி செய்திருக்கிறது.
ஆனால், வேலூர் மக்களவைத் தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற வேண்டுமென்ற நோக்கத்தில் மக்களவையில் ஒரு நிலையையும், மாநிலங்களவையில் எதிர்நிலையையும் அதிமுக எடுத்து இரட்டை வேடம் போட்டிருக்கிறது. அதிமுக எப்படி இரட்டை தலைமையில் இயங்குகிறதோ, அதைப்போலவே முத்தலாக் மசோதாவிலும் இரட்டை வேடம் போட்டிருக்கிறது.
இத்தகைய இரட்டை வேடம் போடும் அதிமுகவுக்கு உரிய பாடம் புகட்டுவதற்கு அருமையான வாய்ப்பு வேலூர் மக்களவைத் தொகுதி வாக்காளர்களுக்கு இருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதிமுக வேட்பாளரை டெபாசிட் இழக்கிற வகையில் தோல்வியைத் தர வேண்டும்", என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.