கூலித் தொழிலாளியின் மகள் மருத்துவம் படிக்க திருவண்ணாமலை ஆட்சியர் உதவி: குவியும் பாராட்டுகள் 

மாணவி தீபாவை சந்திக்கும் ஆஅட்சியர் கந்தசாமி, உடன் மாணவியின் பெற்றோர்
மாணவி தீபாவை சந்திக்கும் ஆஅட்சியர் கந்தசாமி, உடன் மாணவியின் பெற்றோர்
Updated on
2 min read

ஆரணி 

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் தீபா. இவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிக்கத் தகுதி பெற்றார். ஆனால், கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவித்த தீபாவுக்கு திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உதவித்தொகை வழங்கினார். இதனால் அவரின் மருத்துவக் கனவு நனவாகியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள இரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி நாகராஜன். இவரது மகள் தீபா. அரசுப் பள்ளியில் படித்தாலும் படிப்பில் சுட்டியாகத் திகழ்ந்தார். பத்தாம் வகுப்பில் 495/500 எடுத்தவர், பிளஸ் 2 தேர்வில் 1160/1200 மதிப்பெணகள் பெற்றார். நீட் தேர்வில் 564 மதிப்பெண்கள் பெற்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் அவரது குடும்பம் திணறியது. 

நிதியுதவி வழங்கும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி

இதையடுத்து உதவி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். மாணவியின் தேவையை அறிந்த ஆட்சியர் கந்தசாமி அவருக்கு உதவி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். தனியார் தொண்டு நிறுவனம் உதவியுடன் தீபாவின் கல்விக் கட்டணத்தை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதற்காக ஆரணி அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற ஆட்சியர் கந்தசாமி, மாணவி தீபாவின் குடும்பத்தை வரவழைத்துப் பேசினார். அப்போது மாணவி தீபா, பள்ளி நாட்களில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி என தனித்திறன் போட்டிகளில் பெற்ற பரிசுகளை எல்லாம் ஆட்சியருக்குக் காண்பித்தார். 

பரிசுப்பொருட்களை காண்பிக்கும் மாணவி தீபா

இதை ஆர்வத்துடன் பார்வையிட்டுக் கேட்டறிந்த ஆட்சியர் கந்தசாமி, தீபாவைப் பாராட்டினார். பின்னர் தீபா மருத்துவம் படிப்பதற்காக முதல் கட்டமாக ரூ.50 ஆயிரத்துக்கான தொகையை வழங்கினார். மேலும் மருத்துவம் படிப்பதற்கான மொத்த செலவையும் ஏற்பதாகவும் தெரிவித்தார். கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவை நிறைவேற்றிய ஆட்சியரைப் பலரும் பாராட்டினர்.

செந்தில்குமார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in