Published : 31 Jul 2019 01:56 PM
Last Updated : 31 Jul 2019 01:56 PM

பொறியியல் படிப்பில் சேர ஆர்வமில்லை: 52% இடங்கள் காலி

பொறியியல் படிப்பில் சேர மாணவர்களுக்கு ஆர்வமில்லாததால், தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளில் 52 சதவீத இடங்கள் காலியாக உள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 479 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு உரியவை.

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேர 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 1 லட்சத்து ஆயிரத்து 692 பேர் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றனர்.

முதற்கட்டமாக விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கும், தொழிற்கல்வி பிரிவினருக்கும் ஜூன் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சென்னையில் நேரடிக் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு 4 சுற்றுகளாக, ஜூலை 3-ம் தேதி தொடங்கி நடந்தது. ஒதுக்கீட்டு ஆணைகள் ஆன்லைனிலேயே வழங்கப்பட்டன.

இறுதிச்சுற்றான 4-வது சுற்று கலந்தாய்வு கடந்த ஜூலை 18-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி முடிவடைந்தது. கலந்தாய்வின் இறுதியில் ஒட்டுமொத்தமாக 83,396 இடங்கள் மட்டுமே நிரம்பின. இதனால் 48 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு, 52 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டும் இதேபோன்று பொறியியல் படிப்பில் 77,450 இடங்களே நிரம்பின. சுமார் ஒரு லட்சம் இடங்களில் யாரும் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x