Published : 31 Jul 2019 13:24 pm

Updated : 31 Jul 2019 13:24 pm

 

Published : 31 Jul 2019 01:24 PM
Last Updated : 31 Jul 2019 01:24 PM

விவசாயிகளுக்கு கைகொடுக்கும் ‘கிசான் ரேஷன் கடைகள்’

kisan-ration-shop-for-farmers

வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று வேதனைப்படும் விவசாயிகளுக்குக் கொடுக்கிறது மத்திய அரசின் திட்டமான `கிசான் ரேஷன் ஷாப்’ (விவசாய நியாய விலைக்கடை). விவசாயிகள் நிர்ணயிக்கும் விலையில் விளை பொருட்களை வாங்கி, பொதுமக்களுக்கு மானிய விலையில் விற்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

ஏற்கெனவே நாடு முழுவதும் விவசாய நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில்,  தமிழகத்தில் இந்தக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக  அதிகரிக்கப்பட்டு வருகிறது.    

இது குறித்து கிசான் ரேஷன் கடைகள் திட்ட இயக்குநர் ஆர்.ஜெயகணேஷ் கூறும்போது, “தமிழகத்தில் தற்போது 650 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், அரிசி, பருப்பு, எண்ணெய், மசாலா வகைகள், சோப்பு உள்ளிட்ட அனைத்து மளிகைப் பொருட்களுடன், காய்கறி, பால், முட்டை ஆகியவையும் 10 முதல் 50 சதவீதம் வரை மானிய விலையில் விற்கப்படுகின்றன.

இந்தக் கடைகளில் பொருட்கள் வாங்க விரும்புவோர், தங்களது ஸ்மார்ட் கார்டு, ஆதார் அட்டை மற்றும் உழவர் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டுசென்று,  அருகில் உள்ள கிஷான் ரேஷன் கடையில் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஓரிடத்தில் பதிவு செய்தால், நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க முடியும். 

விவசாயிகளின் விளை பொருட்கள் மட்டுமின்றி, முன்னணி நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களையும் தேவையான அளவுக்கு வாங்கிக் கொள்ளலாம். அடையாள அட்டைகள் இல்லாதவர்கள், பொருட்களுக்கான முழு தொகையையும் செலுத்த வேண்டும்.

இக்கடைகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படுகின்றன. 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு கடை வீதம், தமிழகம் முழுவதும் 1.68 லட்சம் கடைகள் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

கிசான் ரேஷன் கடை நிர்வாக அலுவலர் என்.கிருஷ்ணகுமார் கூறும்போது, “கோவை மாவட்டத்தில் ஏற்கெனவே 25 இடங்களில் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிதாக கணபதி, கவுண்டம்பாளையம் பகுதிகளில் 3 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 
மக்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் தரமாகவும், குறைந்த விலையிலும், தடையின்றியும் கிடைப்பதால் மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கடைகளுக்கு மாதந்தோறும் சராசரியாக 1.50 லட்சம் டன் பொருட்கள் தேவைப்படுகின்றன.

அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அனைத்தையும் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வருகிறோம். விவசாயிகளே நிர்ணயிக்கும் நியாயமான விலைகொடுத்து பொருட்கள் வாங்கப்படுகின்றன.

இதுதவிர, பொதுமக்களும் கடைகளைத் தொடங்கலாம். 100 சதுர அடி, 500 சதுர அடியில் கடைகளை நடத்த விரும்புவோர்  0422-4952190, 63834 49455 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள், விதவைகள், முன்னாள் ராணுவத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்றார்.

இத்திட்டத்தின் செயல் அலுவலர் இ.கிஷோர் கூறும்போது, “ஒரு கடைக்கு 100 பேரை உறுப்பினராக சேர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.  ரூ.5,400, ரூ.10,800, ரூ.21,600 செலுத்தி உறுப்பினராகி, இந்த தொகைக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இலவசமாக தினமும் கால்,  அரை, ஒரு லிட்டர் பால் வழங்கப்படும். ரூ.5,750, ரூ.11,500, ரூ.22,500, ரூ.45,000 செலுத்தி உறுப்பினராக பதிவு செய்வோருக்கு, மாதத்துக்கு 20 லிட்டர் கேன் குடிநீரை, 4, 8, 15, 30 தடவைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

இதேபோல, அரிசி, நாட்டுக்கோழி, முட்டை, கறிக்கோழி, வான்கோழி, மீன், ஆட்டு இறைச்சி, காய்கறிகள், பழங்கள், அழகு சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவையும் திட்டங்களைப் பொறுத்து வழங்கப்படும். பொதுமக்களுக்கு நாட்டுக்கோழி முட்டை ரூ.4-க்கும், இறைச்சி கிலோ ரூ.150-க்கும் விற்கப்படுகிறது” என்றார். 

வேலைவாய்ப்பு...

தமிழகம் முழுவதும் உள்ள கிசான் ரேஷன் கடைகளில், மாவட்ட அளவிலான அலுவலர்,  நிர்வாகிகள், ஓட்டுநர்கள், மேற்பார்வையாளர், விற்பனைப் பிரதிநிதி, டெலிகாலர், பாதுகாவலர் உள்ளிட்ட 68,500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வேலை தேடுவோர் tnemp@krdc-gov.org.in என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது சுயவிவரக் குறிப்பை அனுப்பினால், விண்ணப்பம் அனுப்பி வைக்கப்படும். அதை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, விண்ணப்பிக்கலாம். நேர்காணல் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்” என்று இத்திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- த.சத்தியசீலன்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

விவசாயிகள் ரேஷன் கடைகிசான் ரேஷன் கடைகள்வேளாண் விளை பொருட்கள்விவசாய நியாய விலைக்கடைKisan ration shopசலுகை விலை மளிகை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author