அவர்தாம் பெரியார்! - அழியாத நினைவுகளைச் சுமக்கும் பெரியார்-அண்ணா நினைவகம்

அவர்தாம் பெரியார்! - அழியாத நினைவுகளைச் சுமக்கும் பெரியார்-அண்ணா நினைவகம்
Updated on
2 min read

தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும், மண்டைச் சுரப்பை உலகு தொழும், மனக் குகையில் சிறுத்தை எழும், அவர்தாம் பெரியார்” என்பார் பாரதிதாசன். பல நூற்றாண்டு காலம் சொந்த மண்ணிலேயே அடிமைப்பட்டுக் கிடந்த பாமரத் தமிழரைத் தட்டி எழுப்பியவர் பெரியார்.மக்களிடம் இருந்த அறியாமையை நீக்கி, அறிவைப் புகட்டியதுடன், மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தவர்களை எழுப்பி, சுயமரியாதை மிக்க சமுதாயத்தை உருவாக்கியவர் பெரியார். இப்படி  பகுத்தறிவு, சமுதாயப் புரட்சி, பெண் விடுதலை என சமூக மாற்றத்துக்கான அழுத்தமான குரல் கொடுத்த பெரியார் பிறந்த ஊர் ஈரோடு.

ஈரோட்டின் புகழ் உலக அளவில் சென்றடையக் காரணமாய் இருந்தவர் பெரியார். திராவிட இயக்கத்தின் ஆணிவேராக விளங்கும் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்பட, வரலாற்றில் இடம்பெற்ற முன்னணித் தலைவர்கள் வாழ்ந்த, வசித்த இடம் என்ற பெருமையும் ஈரோட்டுக்கு உண்டு.

திராவிட இயக்கத்தின் பிதாமகன்களான பெரியார் ஈ.வே.ராமசாமி, அண்ணாதுரை ஆகியோரின் வரலாறு சொல்லும் இடமாக விளங்குகிறது பெரியார்-அண்ணா நினைவகம்.  திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது  ஈரோட்டில் பெரியார் பிறந்து, வாழ்ந்த வீட்டின் ஒரு பகுதி, 1976-ல் தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வீட்டின் முன்பகுதி பெரியார் நினைவகமாகவும், வீட்டின் பின்பகுதியில், ‘குடியரசு’ பத்திரிகை ஆசிரியராக இருந்து அண்ணா பணியாற்றிய இடம் அண்ணா நினைவகமாகவும் மாற்றப்பட்டது.

ஈரோட்டின் மிகப் பெரிய வியாபாரியாக, செல்வந்தராக விளங்கிய பெரியாரின் குடும்ப உறவுகளின் படங்களில் தொடங்கி, அவரது ஒவ்வோர் அசைவுகளும் நினைவகத்தில் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தனது ஆருயிர் தோழரான ராஜாஜி, முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்,  பெரியாருடன் இருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் நினைவகத்தில் உள்ளன.

அபூர்வ படங்கள் மட்டுமல்லாது, பெரியார் மற்றும் அண்ணா பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருவது நினைவகத்தின் மற்றொரு சிறப்பு.
பெரியார் பயன்படுத்திய மரமேஜை, அவரது அடையாளமாய் விளங்கும் கண்ணாடி, கைத்தடி, படுத்து உறங்கிய கட்டில், சக்கர நாற்காலி, உடைகள் என பார்வையாளர்களை பெரியார் வாழ்ந்த காலத்துக்கே கொண்டுசெல்லும் வகையில் இப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பெரியாரின் கையெழுத்து, பெரியாருக்கு வ.உ.சி. உதவி கேட்டு எழுதிய கடிதம், ஐரோப்பிய நாடுகளில் ஓராண்டு சுற்றுப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள் என நினைவகம் முழுக்க வரலாறு நிரம்பி இருக்கிறது. அதேபோல, குடியரசு இதழுக்காக அண்ணா பணியாற்றியபோது, அவருக்கென தனது வீட்டின் பின்பகுதியில் தனி வீட்டையே பெரியார் ஒதுக்கிக் கொடுத்து இருந்தார். 

அந்த வீட்டில் அண்ணா பயன்படுத்திய மேஜை, நாற்காலி, எழுதிய பேனா, அரிக்கேன் விளக்கு, சமையலறை ஆகியவை அண்ணா நினைவகத்தில் இடம்பெற்றுள்ளன.

உள்ளூர், வெளியூர் என நாள்தோறும் பெரியார் நினைவகத்தைப் பார்க்க பலரும்
வருகின்றனர். பெரியார்-அண்ணா நினைவகத்தைப்  பார்வையிட வந்த முக்கியப் பிரமுகர்கள் பதிவும் கவனத்தில் கொள்ளக்கூடியதாக உள்ளது.

திராவிட இயக்க அரசியலுக்கு அச்சாணியாய் விளங்கிய பெரியாரின் நினைவகத்தை சமீபத்தில் பார்வையிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ‘என் சிந்தனை வளர்ந்த வீடு இது. அவர் சிந்தனை இங்கே வாழ்ந்த காரணத்தால்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் கருத்துப்பதிவுகளும் உள்ளன.

இந்த நினைவகத்தில், பெரியாரின் மரணசாசனம் என்ற பெயரில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டு பலரின் கவனத்தையும் ஈர்க்கிறது. அதில், ‘தனது 95-வது வயதில் பெரியார் 35 நாட்கள் சூறாவளிப் பிரச்சாரம் செய்தார். இறுதி மூச்சு அடங்குவதற்கு 100 மணி நேரத்துக்கு முன்பாக சென்னை தியாகராயர் நகரில் ஒன்றரை மணி நேரம் பேசினார். 

இறுதிச் சொற்பொழிவு உட்பட 42 நிகழ்ச்சிகளில் அறிவுரை ஆற்றினார்’ என்று சொல்லும் பெரியார் நினைவக பதாகையில், ‘உலகத்திற்கே நாம் வழிகாட்டிப்போவோம்; புது உலகம் காண்போம்; இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய சக்தி உடையவராக இருப்போம்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

பெரியார் அண்ணா நினைவகத்தோடு தொடர்புடைய திராவிடர் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் கூறும்போது, “பெரியார்-அண்ணா நினைவகத்துக்கு  வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் வருகின்றனர். 

இதுபோன்ற தருணங்களில், நான் நினைவகத்துக்குச் சென்று பெரியாரின் சிறப்பு குறித்து விளக்கம் அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அரசியல், சமூக விடுதலை, பகுத்தறிவு என பெரியாரின் பல பரிணாமங்களை அவர்களுக்கு எடுத்து சொல்ல முடிகிறது.

அதே நேரத்தில் சிறு குழந்தைகள் வரும்போது, அவர்களுக்கு பெரியாரின் கொள்கைகளை எப்படிச் சொல்வது என்ற தடுமாற்றம் ஏற்படுவது உண்டு. அப்படி வரும்போது, பெரியார் குழந்தையாக இருந்தபோது, சாதிய வேறுபாடுகளைப் போக்கும் வகையில், குறும்புத்தனமாக செய்த சம்பவங்களைச் சொல்லி, குழந்தைகளுக்கும் பெரியாரிய கருத்துக்களை சேர்த்து விடுகிறேன்.

குடியரசு இதழுக்காக அண்ணா இரவு வெகுநேரம் கண் விழித்து கட்டுரைகளை எழுதுவார். விடியற்காலை வரையும் சில நாட்கள் இது நீடிக்கும். அப்படி எழுதப்பட்ட கட்டுரைகளைப் படித்தவுடன், அவரது இடத்துக்கே வந்து பெரியார் மனம்திறந்து பாராட்டியுள்ளார். ஒவ்வொருமுறை பெரியார் நினைவகத்துக்கு வரும்போதும், அவர்களது நினைவுகள் மனதில் ஓடும். அவரது வாழ்க்கை சம்பவங்களை அசைபோட்டவாறே, நினைவகத்தை சுற்றி வரும்போது கிடைக்கும் அமைதி விவரிக்க முடியாதது” என்றார்.

பெரியார்-அண்ணா நினைவகத்தை நாள்தோறும் காலை 9 மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும், பகல் 2 மணி முதல் 6 மணி வரையிலும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.

- எஸ்.கோவிந்தராஜ் 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in