

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக நடிகர் சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''அப்துல் கலாமின் மறைவால் வருங்கால சமுதாயம் ஒரு சிறந்த வழிகாட்டியை இழந்து தவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்திய நாடு வளர்ச்சியடைய இளைஞர்கள் பாடுபட வேண்டும்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். கோடிக்கணக்கான இந்தியர்களுடன் இணைந்து எங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மாணவ சமுதாயத்துக்கு தமது அனுபவத்தையும், ஆற்றலையும், பகிர்ந்தளித்து வந்த கலாம் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மரணம் அனைவரின் மனதிலும் ஒரு அதிர்வலையை உண்டாக்கி உள்ளது.
அவரின் நல்ல எண்ணங்களையும், கனவுகளையும் செயல்படுத்துவதே நமது தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும். அதுவே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்'' என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் அப்துல் கலாமுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது