

‘தமிழகத்தில் யாருக்கும் பாது காப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள் ளது. கொலை, கொள்ளை சம்ப வங்கள் அதிகரித்து, அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது’, என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி யில் கொலை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வேலு தங்கமணியின் உடலுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மக்களவை உறுப்பினர் சுப்பராயன் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
தொடர்ந்து முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியது:
முதல்வர் பழனிசாமி ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து அன்றாட நிகழ்வுகளாக மாறி வருகிறது. முதல்வரின் சொந்த தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வர் கொடூரமான முறையில் வெட்டப் பட்டு, அதற்கான ஆதாரமாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் இருந்தும், குற்றவாளிகளை காவல்துறையால் கைது செய்ய முடிய வில்லை . அவர்களாகவே நீதிமன்றத்தில் சரண் அடையும் வரை காவல் துறையின் நடவடிக்கை இருந்துள்ளது.
கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் யார் யார் என்பதனை அறிந்து, அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டும். நேற்று முன்தினம் நெல்லை, குளித்தலை உள்ளிட்ட இடங்களில் நடந்த கொலை சம்பவம் மக்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆணவப்படுகொலையை ஒடுக்குவதை விட்டுவிட்டு, அவர்களுக்கு ஆதரவாக முதல்வர் பேசி வருவதை கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.