

கோவை இருகூர் - பீளமேடு ரயில்பாதை குறுக்கே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, அங்குள்ள மக்கள் கடவுளிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
கோவை மாநகராட்சியின் 59-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சிங்காநல்லூர் - எஸ்ஐஎச்எஸ் காலனி சாலையின் குறுக்கே இருகூர் - பீளமேடு ரயில்பாதை செல்கிறது. இந்த பகுதியில் நேதாஜி நகர், தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனி, கங்கா நகர், காவேரி நகர், திருவிக நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் இருப்பதால், ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென நீண்ட நாட்களாக பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து கடந்த 2013-ல் இங்குள்ள லெவல் கிராசிங்கில் ரயில்வே மேம்பாலம் அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் ரூ.21.18 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் அடுத்தடுத்த சில மாதங்களிலேயே பாலம் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து பிரச்சினை நிலவி வருகிறது. வாகனங்கள் சுமார் 3 கிமீ வரை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது.
இந்நிலையில் பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டுமென வலியுறுத்தி பொதுமக்கள், நேற்று கடவுளிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிங்காநல்லூர் நேதாஜிபுரம் காந்திசிலை எதிரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு, கடவுளிடம் மனு அளிப்பது போல நூதனப் போராட்டம் நடத்தினர்.
பொதுமக்கள் கூறும்போது, ‘மாநில, மாவட்ட நிர்வாகங்களின் மெத்தனமான நடவடிக்கை காரணமாக மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இது குறித்து அனைத்து தரப்பு அதிகாரிகளையும் சந்தித்து முறையிட்டுவிட்டோம். கடந்த ஆண்டு டி.ஆர்.ஓ. தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் 3 மாதங்களில் பாலப் பணிகளை தொடங்கும் என உறுதியளித்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
இந்த பாலம் கட்டி முடிக்கப்படாததால், பல கிமீ தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. கடந்த ஜனவரியில் மறியல் போராட்டம் நடத்தினோம். ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால், கடவுளிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்’ என்றனர்.