நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து தமிழக அமைச்சர்களுடன் பொன்.ராதாகிருஷ்ணன் ஆலோசனை

நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து தமிழக அமைச்சர்களுடன் பொன்.ராதாகிருஷ்ணன் ஆலோசனை
Updated on
1 min read

மத்திய கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 4.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்தார். அமைச்சருடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.

தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகி யோரை அவர்கள் சந்தித்துப் பேசினர். ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர், நிருபர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

குளச்சல் துறைமுகம் உட்பட கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை சம்பந்த மான மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். நிதி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்களை சந்திக்க முதல்வர் ஏற்பாடு செய்தார். அதன்படி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவை சந்தித்துப் பேசினோம்.

குளச்சல் துறைமுகத்தை கொண்டு வருவதற்கு முழுமையான ஒத்துழைப்பை மத்திய அரசுக்கு அளிக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்காக முதல்வருக்கும் அரசுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

அதேபோல, சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரையான மேம்பால சாலை திட்டம் குறித்த பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளோம். மேலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு சாலை மற்றும் துறைமுகம் தொடர்பான பிரச்சினைகளையும் பேசியுள்ளோம். பேச்சுவார்த்தை மகிழ்ச்சி தருவதாக இருந்தது.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in