Published : 31 Jul 2019 07:31 AM
Last Updated : 31 Jul 2019 07:31 AM

முத்தலாக் தடை சட்டத்துக்கு மக்களவையில் ஆதரவு; மாநிலங்களவையில் எதிர்ப்பு: இரட்டை நிலைப்பாட்டால் அதிமுகவில் குழப்பம்

முத்தலாக் தடைச் சட்டத்துக்கு மக்களவை யில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிர்ப்பு என்ற அதிமுகவின் இரட்டை நிலைப் பாடு அக்கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி யுள்ளது. அதேநேரம் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பால் மாநிலங்களவையில் முத்தலாக் சட்ட மசோதா எளிதாக நிறைவேறியது.

இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமையை பாதுகாக்கும் வகையில், முத்தலாக் தடைச் சட்டத்தை நிறைவேற்ற பாஜக அரசு முயற்சித்து வருகிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் இருமுறை இந்த மசோதா கொண்டுவரப்பட்டும், எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பால் நிறைவேற்ற முடி யாமல் போனது.

இந்நிலையில், கடந்த ஜூலை 25-ம் தேதி மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முத்தலாக் தடை சட்ட மசோதாவை கொண்டுவந்தார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த சட்டத்தை எதிர்த்து பேசினர்.

ஆனால், இந்த சட்டத்தில் 3 திருத் தங்களை நிறைவேற்றுமாறு கூறி ஆரம்பம் முதலே எதிர்த்துவந்த அதிமுகவின் எம்.பி. யான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் இந்த சட்டத் துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து பேசினார். இந்நிலையில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியது.

ரவீந்திரநாத்தின் இந்த முடிவு, முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்கள் அதிகளவில் உள்ள வேலூரில் தேர்தல் நடக்கும் நேரத்தில் இது பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் அதிமுக தரப்பில் ஏற்பட்டுள்ளது.

கட்சித் தலைமையிடம் கேட்டு இதுதொடர்பாக அவர் பேசியிருக்கலாம் என்பதே அதிமுக நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது. சமீபத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், “மக்களவையில் அவரது நிலைப்பாடு குறித்து நான் கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை. அதே நேரம், மாநி லங்களவையில் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம்” என்றார்.

மாநிலங்களவையில் வெளிநடப்பு

இந்நிலையில், நேற்று மாநிலங்கள வையில் இந்த மசோதா அறிமுகப்படுத் தப்பட்டது. அப்போது அதிமுக மாநிலங் களவை குழு தலைவர் நவநீதகிருஷ்ணன், இந்த மசோதாவை எதிர்த்து பேசினார். அதிமுகவின் கருத்துகள் ஏற்கப்படாத நிலையில், 11 அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதுதொடர்பாக, ஏ. நவநீதகிருஷ்ணன் கூறும்போது, “கட்சியில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மாநிலங்களவை யில் எதிர்ப்பு தெரிவித்துள்ளேன். இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு முத்தலாக் தடை சட்டம்எதிரானது. இந்த சட்டத்தை இயற்றும் அதிகாரமே நாடாளுமன்றத்துக்கு இல்லை” என்றார்.

இந்நிலையில், நேற்று மாலை மாநிலங் களவையில் முத்தலாக்தடை சட்ட மசோதா குறித்தவாக்கெடுப்பு நடந்தது. மசோதா வுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகின. வித்தி யாசம் 15 வாக்குகள் மட்டுமே. அதிமுக வின் 11 உறுப்பினர்களும், ஐக்கிய ஜனதாதள உறுப்பினர்கள் 6 பேரும் இதில் பங்கேற்று எதிர்த்து வாக்களித் திருந்தால், இம்முறையும் மசோதா தோல்வி யடைந்திருக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் மக்களவையில் முத்த லாக்குக்கு ஆதரவு, மாநிலங்கவையில் எதிர்ப்பு என்றஅதிமுகவின் இரட்டை நிலைப்பாடு, அக்கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்பியான அன்வர் ராஜா கூறும்போது, “முத்தலாக் மசோதாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்துள்ள மதத்தை பின்பற்றுவதற்கும் பேணுவதற்கும், அந்த மதத்தின்படி நடக்கவும் அரசியல் சாசனம் உரிமைகள் வழங்கியுள்ளது. அந்த உரிமைகளை மீறுவதாக இந்த மசோதாவை நாங்கள் பார்க்கிறோம்.

இந்த மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளது. எனவே, இதை எதிர்த்து பேச முடியுமே தவிர, எண்ணங்களை பதிவு செய்யலாமே தவிர, மக்களவையில் மசோதாவை தோற்கடிக்க முடியாது. மசோதா அவசரஅவசரமாக இரவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக என்ன பேசுவது என்பது பற்றிகட்சி தலைமையிடம் அறிவுறுத்தல்களை பெற்று பேசியிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் கட்சியின் கொள்கை ஒன்றுதான்” என்றார்.

இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறும்போது, “பொது சிவில் சட்டம் எந்த வடிவத்தில் வந்தாலும்நாங்கள் ஏற்கமாட்டோம். முத்தலாக் மசோதாவில் ஜெயலலிதா தெரிவித்த 3 திருத்தங்களையும் மேற்கொண்டால் ஏற்றுக் கொள்வோம். இது தான் அதிமுகவின் நிலைப்பாடு’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x