

ரெ.ஜாய்சன்
தமிழகத்தில் காலியாக உள்ள 8,826 காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு 4 மாதங் களாகியும், தேர்வு தேதி அறிவிக்கப்படாததால், இத்தேர்வுக்கு விண்ணப்பித்த இளைஞர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு அறிவிக்கை கடந்த மார்ச் 6-ம் தேதி வெளியிடப்பட்டது.
மாவட்ட, மாநகர ஆயுதப்படைக்கு பெண் காவலர்கள் 2,465 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு ஆண் காவலர்கள் 5,962 பேர், இரண்டாம் நிலை சிறை காவலர்கள் (ஆண்கள் 186, பெண்கள் 22) 208 பேர், தீயணைப்பாளர் (ஆண்கள்) 191 பேர் என மொத்தம் 8,826 காலியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு அறிவிக்கப்பட்டது.
எழுத்துத் தேர்வுக்கு 4.25 லட்சம் பேர் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். இவர்கள் உடனடியாக தனியார் பயிற்சி நிலையங்களிலும், அரசு சார்பில் நூலகங்களில் செயல்படும் பயிற்சி மையங்களிலும் சேர்ந்து இரவு பகலாக படித்து வருகின்றனர்.
ஜூலை 14-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என தகவல் வெளியானது. ஆனால், அன்று தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது, ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பதால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி கின்ஸ் அகாடமி இலவச பயிற்சி மைய நிறுவனர் எஸ்.பேச்சிமுத்து கூறும்போது, ``தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படாத தால் இளைஞர்கள் சோர்வடைந் துள்ளனர். 3 மாதங்கள் வரை பயிற்சி பெற்ற பலர், தங்களது பயிற்சிகளை கைவிட்டு பிற வேலைகளுக்கு சென்றுவிட்டனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில் கேட்டால் முறையான பதில் இல்லை. தேர்வுக்கான தேதியை உடனடியாக வெளியிட வேண்டும். தேர்வு அறிவிக்கை வெளியிடும்போதே தேர்வு தேதியையும் வெளியிட்டால் மாணவர்கள் பயனடைவர்” என்றார் .
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரித்த போது, “காவலர் எழுத் துத் தேர்வு ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறும். தேர்வுக்கான ஏற்பாடு களை செய்யுமாறு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தில் இருந்து சுற்றறிக்கை வந்துள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் அனுமதி சீட்டை பதிவிறக் கம் செய்து கொள்ளலாம். விரைவில் அறிவிப்பு வரும்” என்றனர்.