Published : 31 Jul 2019 06:33 AM
Last Updated : 31 Jul 2019 06:33 AM

நீராதாரங்களை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு சமூக பங்களிப்பு நிதியை பயன்படுத்த வேண்டும்: பெருநிறுவனங்களுக்கு மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் 

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீர் ஆதாரங்களைப் புனரமைத்தல், திடக்கழிவு மேலாண்மையில் நவீன தொழில்நுட்ப பயன்பாடு ஆகியவற்றில் பெருநிறுவனங்கள் தங்கள் சமூக பங்களிப்பு நிதியை பயன்படுத்த முன்வர வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களைப் புனரமைத்து புத்துயிர் அளிக்கவும், அனைத்துக் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கவும், மாநகராட்சியில் தினசரி சேகரமாகும் திடக்கழிவுகளை நவீன தொழில்நுட்பம் மூலம் கையாண்டு நிலம் மாசுபடுவதை தவிர்க்கவும், பெருநிறுவனங்கள் தங்கள் சமூகப் பங்களிப்பு நிதியில் பணிகள் மேற்கொள்வது குறித்த தனியார் தொழில் நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் ஆணையர் பேசியதாவது:

கடந்த 2 ஆண்டுகளில் பராமரிப் பின்றி இருந்த 210 நீர்நிலைகளைக் கண்டறிந்து சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடக்கிறது. பல்வேறு நீர்நிலைகளில் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. சென்னை மாநகராட்சி மூலதன நிதி, சென்னை சீர்மிகு திட்ட நிதி, தனியார் நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்களின் சமூக பொறுப்பு பங்களிப்பு நிதியின் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனியார் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் சமூக பொறுப்பு பங்களிப்பு நிதியின் மூலம், இந்த நீர்நிலைகளைப் புனரமைக்க முன்வர வேண்டும்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க, 2 லட்சம் வீடுகளில் மழைக்காலத்துக்கு முன் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்காக தனியார் நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க முன்வர வேண்டும். தனியார் நிறுவனங்கள் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மையை நவீன தொழில்நுட்ப உதவியுடன் கையாள தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்கள், நீர்நிலைகள், பூங்காக்கள், உடற் பயிற்சிக் கூடங்கள், கடற்கரை களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும்போது, தனியார் நிறுவன ஊழியர்களும் அதில் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி, இணை ஆணையர் ஆர்.லலிதா, துணை ஆணையர்கள் எம்.கோவிந்தராவ், எஸ்.திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x