Published : 30 Jul 2019 08:46 PM
Last Updated : 30 Jul 2019 08:46 PM

கர்ப்பிணி பெண்ணுக்கு நள்ளிரவில் உதவிய பெண் ஆய்வாளர், செயின் பறிப்பு நபரை துணிச்சலாக பிடித்த பெண்: காவல் ஆணையர் நேரில் அழைத்து வெகுமதி


பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை தக்க சமயத்தில் மருத்துவமனையில் சேர்க்க உதவிய பெண் ஆய்வாளர் மற்றும் சங்கிலி பறிப்பு குற்றவாளியை துணிச்சலுடன் மடக்கிப் பிடித்த பெண் ஆகியோரை சென்னை காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்க்க உதவிய பெண் காவல் ஆய்வாளர்  தலைமைச்செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி  கடந்த 27 அன்று இரவு பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார் 2.00 மணியளவில் காவல் வாகனத்தில் அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் ரோந்து பணியாக சென்ற கொண்டிருந்தபோது, அங்கு தனியாக நின்று பெண் ஒருவர் அழுதுக் கொண்டிருந்துள்ளார். 
இதனை பார்த்த ஆய்வாளர் ராஜேஸ்வரி காவல் வாகனத்தை நிறுத்தி, அழுது கொண்டிருந்த பெண்ணிடம் விசாரணை செய்ததில், அவர் தனது பெயர் சகுந்தலா என்றும் நிறை மாத கர்ப்பிணியான தனது மகள் ஷீலா ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் பிரசவ வலியால் துடித்து கொண்டிருப்பதாகவும், உதவிக்கு யாரும் இல்லை என்று கூறியுள்ளார். 
உடனே ஆய்வாளர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து விட்டு, மேற்படி சகுந்தலா வீட்டிற்கு  சென்றுள்ளார். அப்பொழுது அங்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனம், சகுந்தலா வீட்டின் குறுகிய தெருவில் செல்ல முடியாததால், வீட்டின் அருகில் உள்ள பிரதான சாலையில் நின்றது. உடனே, ஆய்வாளர் ராஜேஸ்வரி வீட்டின் மாடியில் பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த ஷீலாவை மாடி படியிலிருந்து அழைத்து வந்து தனது காவல் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, பிரதான சாலைக்கு அழைத்துச் சென்று அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஷீலாவை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
காவற்பணி சமுதாயப்பணி என்பதற்கு எடுத்துக்காட்டாக நள்ளிரவில் தனியாக நின்ற தாயின் பிரச்சினையில் தலையிட்டு கர்ப்பிணி மகளை மருத்துவமனையில் அனுமதித்த ஆய்வாளரை அனைவரும் பாராட்டினர்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஷீலாவிற்கு சுகபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

துணிச்சல் பெண்:
சென்னை, காட்டுப்பாக்கம், விஜயலெட்சுமி நகர், வசிப்பவர்  தனலஷ்மி (50), இவர் கடந்த 27-ம் தேதி அன்று இரவு 9.30 மணியளவில் தனது வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு திரும்ப வீட்டுக்கு செல்ல இந்திராநகரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக  இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தனலஷ்மியிடம் முகவரி கேட்பது போல நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்ப முயன்றுள்ளார். 
சுதாரித்துக் கொண்ட தனலஷ்மி அந்த நபரை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளார். உடனே சங்கிலி பறிப்பு குற்றவாளி தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து தனலஷ்மியின் கையில் வெட்டிவிட்டு இரத்தக்காயம் ஏற்படுத்தி தப்ப முயன்றுள்ளார். எனினும், ரத்தக்காயத்தையும் பொருட்படுத்தாமல் தனலஷ்மி கொள்ளையனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு விடாமல் சத்தம் போட்டபோது, சத்தம் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் ஓடிவந்து தனலஷ்மி பிடித்து வைத்திருந்த சங்கிலி பறிப்பு குற்றவாளியை பிடித்தனர்.
பின்னர் தர்ம அடி கொடுத்து பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பூந்தமல்லி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை  நடத்தினர். போலீஸாரின் விசாரணையில் பிடிபட்ட குற்றவாளியின் பெயர் சிவகுமார் (40), மாங்காடு,  பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
கடன் தொல்லை காரணமாக தனலட்சுமியிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டு பிடிட்டதும் தெரியவந்தது. அதன்பேரில் குற்றவாளி சிவகுமார் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து புகார்தாரரின் தங்கச்சங்கிலி மற்றும் மேற்படி இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சிவகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு தனது வாகனம் மூலம் உரிய நேரத்தில் உதவி மருத்துவமனையில் அனுமதித்து காவல் பணி சமுதாயப்பணி என்பதை உணர்த்திய தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ்வரி மற்றும் கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற சங்கிலி பறிப்பு குற்றவாளியை துணிச்சலாக பிடித்த தனலஷ்மி ஆகிய இருவர் குறித்தும் அறிந்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இருவரையும் தனது அலுவலகத்துக்கு நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினார்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x