

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தவறினால், காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆணவக் கொலைகள் தொடர்பாக நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதன் விசாரணை நடந்து வரும் நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அனைத்துக் காவல் நிலையங்களிலும் சிறப்புப் பிரிவுக்கு எனத் தனியாக காவலர்கள் இல்லாததால் ஆணவக்கொலை வழக்குகளை சட்டம்- ஒழுங்கு வழக்குகளை விசாரிக்கும் காவலர்களே ஆணவக்கொலை வழக்குகளையும் விசாரிப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள காவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது எப்படி சிறப்புப் பிரிவாக கருத முடியும்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆணவக் கொலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனிப் பிரிவு ஏற்படுத்தி ஆணவக்கொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தமிழகம் முழுவதும் அனைத்துக் காவல் நிலையங்களிலும் ஆணவக்கொலை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஆணவக் கொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறினால், காவல்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்படும் என எச்சரித்த நீதிபதிகள், ஆணவக்கொலைகள் தொடர்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு வழங்குவதால் என்ன பயன் கிடைக்கும்? எனக் கேள்வி எழுப்பி, வழக்கின் தீர்ப்பை நாளை தள்ளிவைத்தனர்.