உடல், மன ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்கு கை கொடுக்கும் ஒன் ஸ்டாப் சென்டர் - கோவையில் செயல்பாட்டுக்கு வந்த மத்திய அரசு திட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த மகளிர் சேவை மையத்தின் ஓவியம்.
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த மகளிர் சேவை மையத்தின் ஓவியம்.
Updated on
1 min read

சமுதாயத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. கல்வி, பணி உள்ளிட்டவற்றுக்காக, வீட்டை விட்டு வெளியே செல்லும் இடங்களில் உடல் ரீதியாகவும், மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது இந்த நிலை மாறி, குடும்பத்துக்குள் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பலவிதமான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 

இதனால் இருப்பிடத்திலும், வெளியிலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பாதிக்கப்படும் பெண்களுக்கு கை கொடுக்கும் வகையில், மத்திய அரசின் ‘ஒன் ஸ்டாப் சென்டர்' என்ற திட்டம்,  சமூக நலம் மற்றும் சத்துணவு துறையின் கீழ், கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மகளிர் சேவை மைய ஆலோசகர் எஸ்.தேன்மொழி கூறியதாவது: 

‘ஒன் ஸ்டாப் சென்டர்' என்பது பெண்களுக்கான சேவை மையம். இந்த மையம், வன்முறை, பாலியல் துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பம், சமுதாயம், பணிபுரியும் இடம் மற்றும் பொது இடங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள், இந்த மையத்தை அணுகலாம். 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பாதிப்புக்கு உட்பட்டாலும், உறவினர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் தகவல் தெரிவிக்கலாம். 

இதேபோல், மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளிப்பதன் மூலமாகவும், சமூக நலத்துறை மூலமாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், காவல் மற்றும் நீதித்துறை மூலமாகவும், ‘181' என்ற பெண்கள் உதவி மையம் மூலமாகவும் அணுகலாம். அவர்களின் பிரச்சினைகளுக்கு பல்வேறு சேவைகள் அளிக்கப்படும்.  

அதன்படி, வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை, அவசர கால மீட்பு நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் மூலமாக, காவல்துறை உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே தேவையான மருத்துவ உதவிகளை அளித்தும், அருகே உள்ள அரசு மற்றும் தனியார் மகளிர் இல்லங்களில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். 

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.. தேவைப்படும்பட்சத்தில் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை, அடையாளம் காண முடியாத அறிக்கை, குடும்ப நிகழ்வு அறிக்கை பெறுவதற்கு தேவையான உதவிகள் செய்யப்படும். 

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, தேசிய, மாநில, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலமாக சட்ட உதவி மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்படும். இம்மையத்தில் 1 முதல் 5 நாட்கள் தங்குவதற்கு வசதி ஏற்படுத்தி தரப்படும். எனவே, பல்வேறு வகைளில் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள், பூ மார்க்கெட் பகுதியில் கென்வின் பள்ளி வளாகத்திலுள்ள அரசு சேவை இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘ஒன் ஸ்டாப் சென்டரை' அணுகலாம். அல்லது 0422-2555126 என்ற தொலைபேசி எண்ணிலோ, osccoimbatore@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம். 

இவ்வாறு அவர் கூறினார்.

- த.சத்தியசீலன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in