

கல்வியாளர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும், அறிஞர்களுக்கும் மட்டும்தான் புத்தகத் திருவிழாவா? உடல் உழைப்பையே பிரதானமாகக் கொண்ட தொழிலாளர்களுக்கு கிடையாதா? இந்தக் கேள்விக்கு விடை கொடுத்தது கோவையில் நடைபெற்ற புத்தகத் திருவிழா.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் சார்பில், கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் `கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா’ கடந்த 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறறது. பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில், 250-க்கும் மேற்பட்ட அரங்குகளில், லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் குவிந்தன. கோவை மட்டுமின்றி, திருப்பூர், நீலகிரி, பாலக்காடு என அண்டை மாவட்ட மக்களுக்கும் புத்தகத் திருவிழாவில் திரண்டனர்.
ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கூட்டம் கூட்டமாக வந்து, புத்தகங்களைப் பார்வையிட்டதுடன், தாங்கள் விரும்பிய நூல்களை வாங்கிச் சென்றனர்.
தொழில் நகரான கோவையில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா, அனைத்து தொழிலாளர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், தொழிலாளர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொழிலாளர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காக, கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றதுடன், தங்கள் குடும்பத்தினருடன் புத்தகக் கண்காட்சி அரங்குக்கு வந்து, தேவையான புத்தகங்கள் வாங்கி மகிழ்ந்தனர். புத்தகத் திருவிழாவில் தொழிலாளர்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை ‘தொழிலுக்கு வந்தனை’ என்ற தலைப்பில் நடத்தினார், ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவளப் பிரிவு இயக்குநர் கவிஞர் கவிதாசன்.
தொழிலாளர்களுக்கான பேச்சுப் போட்யில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 31 பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், என்.மதன்குமார், சுமிதா ஜெயந்தி, ஜே.திவ்யா ஆகியோர் முதல் 3 இடங்களை வென்றனர். இதேபோல, பி.விஜயராகவன், எம்.உத்ரகுமார், எம்.ஜவாத், எஸ்.செல்வதுரை, எம்.சுஜா ஆகியோர் ஆறுதல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். தொழிலதிபர் சி.ஜி.பிரியா, தொழில் நிறுவனப் பிரதிநிதிகள் ஆர்.ரவிக்குமார், எம்.லட்சுமி நாராயணன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
தொழிலாளர்களுக்கான கட்டுரைப் போட்டி `வளர்ச்சிக்குத் தேவை - திறன்மிக்க பணியாளர்களே! திறமையான நிர்வாகமே!’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முதல் மூன்று இடங்களை டி.துரைசாமி, பா.அருண்பிரசாத், ஜி.எஸ்.சுரேஷ்குமார் ஆகியோர் வென்றனர். மேலும், ம.சினேகா, எஸ்.செல்வராஜ், ஆர்.தன்மானம், எம்.சங்கீதா, மு.பேச்சிமுத்து ஆகியோர் ஆறுதல் பரிசு வென்றனர்.
தமிழக அரசின் தொழிலகம் மற்றும் பாதுகாப்பு இயக்கக முன்னாள் கூடுதல் இயக்குனர் கே.அருள், தொழில் நிறுவனப் பிரதிநிதிகள் வி.வேலுமயில், பொன்.அண்ணாதுரை ஆகியோர் நடுவர்களா செயல்பட்டனர்.
மேலும், தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், வாசிக்கும் பழக்கம் உள்ள பணியாளர்கள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பி.சீனிவாசன், எம்.வித்யா, ஏ.கோபால்சாமி ஆகியோர் `சிறந்த வாசகர் விருது’க்கு தேர்வு செய்யப்பட்டனர். போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், கருத்தரங்கமும் நடத்தப்பட்டது.
இதில் பேசிய கவிஞர் கவிதாசன், “ஒரு புத்தகம் தனிப்பட்ட நபரின் வாழ்க்கையில் மட்டுமின்றி, ஒரு சமுதாயத்தில், ஒரு நாட்டின் வரலாற்றிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை கொண்டது. மக்களின் வாசிப்பை நேசிக்கச் செய்வதற்காகவே புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
பாட்டாளிகளை படிப்பாளிகளாக மாற்றவும், படிப்பாளிகளை படைப்பாளிகளாக மாற்றவும் `தொழிலுக்கு வந்தனை’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மிகுந்த படைப்பாற்றல் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களை ஊக்குவிக்கவே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
புத்தக வாசிப்பு குடும்பத்தை சீராக கொண்டுசெல்லவும், வருமானத்துக்கு ஏற்ற பொருளாதாரத் திட்டத்தை வகுக்கவும், வரவு-செலவைச் சீரமைக்கவும் உதவும், சேமிப்பைக் கற்றுக்கொடுத்து, வீண் செலவைக் குறைக்கும். தொழில் நகரமான கோவையை, முழுமையாக கல்வி நகரமாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம். வாசிப்பு மிகுந்த சமுதாயமே வளரும். எனவே, எந்த சூழ்நிலையிலும், யாரும் வாசிப்பைக் கைவிடக்கூடாது” என்றார்.
இலக்கிய நிகழ்வுகளை கவிஞர்கள் கோவை கோகுலன், சுப்பு தர்மன், கோவை கிருஷ்ணா, ரூட்ஸ் நிறுவனங்களின் முதுநிலை மேலாளர் எம்.சரவணன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
பறை இசைக் கலைஞர்கள்!
தொடர்ந்து, சொல்முகம் வாசகர் குழுமம் சார்பில் வாசகர் சந்திப்பு நிகழ்ச்சி, `குர்அதுல் ஐன் ஹைதர்’ எழுதிய `அக்னி நதி’ நாவல் மீதான கலந்துரையாடல், நிகர் பறையிசைக் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன.
25 கலைஞர்கள் பறை இசைக் கருவியை இசைத்தபடி, ஒயிலாக நடனமாடியது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. சுரேந்திரனின் `சாலையில் ஒரு சாகசப் பயணம்’ என்ற நூலை, கொடிசியா தலைவர் ராமமூர்த்தி வெளியிட்டார். இதில், பபாசி தலைவர் வைரவன், இலக்கியக் கூடல் அமைப்பு தலைவர் பாலசுந்தரம், புத்தகத் திருவிழா தலைவர் விஜய் ஆனந்த், துணைத் தலைவர் ரமேஷ், ஆலோசகர் வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.