Published : 30 Jul 2019 04:42 PM
Last Updated : 30 Jul 2019 04:42 PM

8 மாதங்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு ஏலம் போன மதுரை மாட்டுத்தாவணி 'டூ வீலர் ஸ்டாண்ட்':  ஆச்சர்யத்தில் ஆழ்ந்த மாநகராட்சி அதிகாரிகள்

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான மாட்டுத்தாவணி பேருந்து நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடம் 8 மாதங்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு ஏலம் போனது அதிகாரிகளையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

மதுரையில் மாநகராட்சிக்கு சொந்தமான ராஜாஜி பூங்கா, மாட்டுத்தாவணி பேருந்து நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடம் உள்பட 28 வருவாய் இனங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏலம் விடப்பட்டன.

இதில், மாட்டுத்தாவணி டூவீலர் ஸ்டாண்ட் 8 மாதத்திற்கு ரூ.47 லட்சத்து 80 ஆயிரத்திற்கு ஏலம் போனது. 8 மாதத்திற்கு இவ்வளவு பெருந்தொகையா?! என மாநகராட்சி அதிகாரிகளே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது ஏலம். இதுதவிர இன்னும் பல சுவாரஸ்யங்கள் இன்றைய ஏல நிகழ்ச்சியில் இடம் பெற்றன.

தினமும் 3000 வாகனங்கள் நிறுத்துமிடம்..

மாட்டுத்தாவணி டூ வீலர் ஸ்டாண்ட்டில் தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இந்த டூ வீலர் ஸ்டாண்ட் 205 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்டது. ஒரு பைக்கை நிறுத்த வாகன ஓட்டிகளிடம் 5 ரூபாய், 96 பைசா கட்டணம் வசூலித்துக் கொள்ள மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. இதனால், மாட்டுத்தாவணி டூவீலர் ஸ்டாண்டை ஏலம் எடுப்பதற்கு ஏலதாரர்களிடம் கடும் போட்டி ஏற்பட்டது. 

இறுதியாக மாட்டுத்தாவணி டூ வீலர் ஸ்டாண்ட் 8 மாதத்திற்கு ரூ.47 லட்சத்து 80 ஆயிரத்திற்கு ஏலம் போனது. இந்தத் தொகையை மாநகராட்சிக்கு செலுத்தும் ஏலதாரர், அரசுக்கு வருமான வரி 2 சதவீதம் ஜிஎஸ்டி 18 சதவீதமும் சேர்த்து கட்ட வேண்டும். அதையும் சேர்த்தால் ஏலதாரர் இந்த டூவீலர் ஸ்டாண்ட்டை நடத்துவதற்கு மாநகராட்சிக்கும், அரசுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.57 லட்சம் வரை கட்ட வேண்டிய இருக்கும். வெறும் 8 மாதத்திற்கு இவ்வளவு தொகைக்கு ஒரே ஒரு டூவீலர் ஸ்டாண்ட் ஏலம்போனது கண்டு மாநகராட்சி அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர். 

கவுரவப் பிரச்சினையால் எகிறிய ஏலத் தொகை:

இதேபோல் மதுரை ராஜாஜி பூங்காவும் ஏலம் விடப்பட்டது. இந்த பூங்காவை எடுக்க இரு தரப்பினர் இடையே கடும் போட்டி நிலவியது. தனிநபர்கள் ஈகோவால் ஏலத் தொகை கிடுகிடுவென எகிறியது.

அதனால், ராஜாஜி பூங்கா 8 மாதத்திற்கு ரூ.83 லட்சத்திற்கு ஏலம் போனது. ஜிஎஸ்டி 18 சதவீதமும் மற்றும் 2 சதவீதமும் வருமான வரியையும் சேர்த்தால் மாநகராட்சிக்கும், அரசுக்கும் சேர்த்து ரூ.1 கோடி வரை இந்த பூங்காவை டெண்டர் எடுத்தவர்கள் கட்ட வேண்டிய வரும். ஆனால், இந்த தொகைக்கு வெறும் 8 மாதத்திற்கு மட்டுமே பூங்கா ஏலம் விடப்பட்டுள்ளது.

இந்த பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.10-ம், சிறியவர்களுக்கு ரூ.5-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை வசூல் செய்தால் ஏலம் எடுத்தவர்கள் போட்ட தொகையை கூட எடுக்க முடியாது. ஆனால், ஏலதாரர்களிடம் ஏற்பட்ட கவுரவ பிரச்சனையாலே இவ்வளவு பெரியதொகைக்கு பூங்கா ஏலம் போனதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x