அஞ்சல் துறை தேர்வை தமிழில் எழுதலாம்; அரசாணையை தாக்கல் செய்தது மத்திய அரசு:  வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்

அஞ்சல் துறை தேர்வை தமிழில் எழுதலாம்; அரசாணையை தாக்கல் செய்தது மத்திய அரசு:  வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை

அஞ்சல் துறையின் தேர்வை பிராந்திய மொழிகளிலும் எழுதலாம் என்ற அறிவிப்பாணையை மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததையடுத்து,  திமுக தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

அஞ்சல் துறையில் தபால்காரர், உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்காக அஞ்சல் துறை கடந்த 14-ம் தேதி எழுத்துத் தேர்வு ஒன்றை நடத்தியது. இதற்கிடையே தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் தேர்வு நடந்தது.

அஞ்சல் துறை தேர்வு குறித்த மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து திமுக மாணவரணிச் செயலாளரும், காஞ்சிபுரம் எம்எல்ஏவுமான எழிலரசன் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து பதிலளித்த அஞ்சல் துறை,  தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் அறிவித்திருப்பதாகத் தெரிவித்து, அஞ்சல் துறை சார்பில் இரண்டு ஆவணங்கள்  தாக்கல் செய்யப்பட்டன.

இரண்டு அறிவிப்புகளிலும் உள்ள குழப்பம், மே மாத அறிவிப்பாணை குறித்த விளக்கத்தை தெளிவுபடுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில், மத்திய அரசின் வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் ஒன்றை அளித்தார். 

அதில்  “அஞ்சல் துறை தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என ஜூலை 11-ம் தேதி அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் என்ற அறிவிப்பு தொடர்கிறது” என்று விளக்கம் அளித்தார். 

அதுதொடர்பான ஆவணத்தை இன்று தாக்கல் செய்வதாக மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் ஜூலை 23-ம் தேதியிட்ட புதிய அறிவிப்பாணை தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திமுக எம்.எல்.ஏ. எழிலரசன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in