

புதுச்சேரி
தியாகிகள் தினத்தையொட்டி புதுச்சேரி – கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தொழிலாளர்கள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
8 மணிநேர வேலை கேட்டு போராடிய பஞ்சாலைத் தொழிலாளர்கள் மீது கடந்த 1936-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி பிரெஞ்சு ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பஞ்சாலைத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களது தியாகத்தை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை மாதம் 30-ம் தேதியை தியாகிகள் தினமாக கம்யூனிஸ்ட் கட்சியினர் கடைப்பிடித்து வருகின்றனர்.
அதன்படி புதுச்சேரியில் ஜூலை 30 தியாகிகள் நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை- கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் நினைவிடம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்து கடலூர் சாலை சிங்காரவேலர் சிலை அருகிலுள்ள தியாகிகள் சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினரர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சலீம், பஞ்சாலைத் தொழிலாளர் சங்க செயலாளர் அபிஷேகம் உள்ளிட்ட நிர்வாகிகள் தியாகிகள் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சியின் சிஐடியு சார்பில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையிலிருந்து பேரணியாகச் சென்று தியாகிகள் சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.