காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா கடைமடை பகுதிகளில் களை இழக்கும் ஆடிப்பெருக்கு

காவிரியில் தண்ணீர் இல்லாததால் வறண்டு காணப்படும் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்டம்.
காவிரியில் தண்ணீர் இல்லாததால் வறண்டு காணப்படும் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்டம்.
Updated on
2 min read

காவிரியில் தண்ணீர் திறக்கப் படாததால், இந்த ஆண்டு கடைமடை பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா களை இழந்தே காணப்படும் நிலை உள்ளதால் பொதுமக்கள் கவலை யடைந்துள்ளனர்.

ஆடிப்பெருக்கு விழா அன்று நதிக்கரைகளில் வாழும் மக்கள் தங்களை வாழ வைக்கும் அந்த நதிக்கு நன்றி செலுத்தும் வகையில், அன்றைய தினம் பெண்கள் படித்துறைகளில் வாழை இலையில் பழம், பூ, பனை ஓலை, மஞ்சள் கயிறு உள்ளிட்டவற்றை, வைத்து நீருக்கு ஆராதனை செய்து வழிபடுவர்.

மேலும், புதுமணத் தம்பதியர் அன்றைய தினம் காவிரிக் கரையில் சிறப்பு வழிபாடுகள் செய்து புதிய தாலிக்கயிறு மாற்றிக் கொண்டு, திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு வழிபடுவர்.

மேட்டூர் அணை வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் போது காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறுகளில் தண்ணீர் இருக்கும். இதனால் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடைபெறும். ஆனால், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.

ஆனால், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், ஜூலை 19-ம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டு, ஜூலை 29-ம் தேதி கடைமடை வரை காவிரி நீர் சென்று சேர்ந்தது. 7 ஆண்டுகள் தண்ணீர் இல்லாமல் களையிழந்திருந்த ஆடிப்பெருக்கு விழா, கடந்த ஆண்டு சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.

இந்த ஆண்டு போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் மேட்டூர் அணை இதுவரை பாசனத்துக்காக திறக்கப்படவில்லை. குடிநீருக்காக மட்டும் விநாடிக்கு 1,000 முதல் 2,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 45.71 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8,605 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா ஆக.3-ம் தேதி நடைபெற வுள்ளது. இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், மேட்டூர் அணையிலிருந்து ஆடிப்பெருக்கு விழாவுக்காக தண்ணீர் திறந்துவிடப் படவில்லை. விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டாலும் அது கடைமடையை சென்று சேருமா என்பது சந்தேகம் தான்.

இதனால் இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லாததால் தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் ஆடிப் பெருக்கு விழா களையிழந்தே காணப்படும் நிலை உள்ளது.போதிய அளவு தண்ணீர் திறக்க கோரிக்கை

இதற்கிடையே, ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவதற்காக நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் கடைமடைப் பகுதி வரை சென்றடையும் வகையில், காவிரி ஆற்றில் தமிழக அரசு போதிய அளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் கொள்ளிடம் சாமிநாதன், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் ஆகியோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- எஸ்.கல்யாணசுந்தரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in