

கேரளாவில் நகைக்கடையில் 4 கிலோ தங்கம், ரூ.30 லட்சம் பணத்தை கொள்ளையடித்து, காரில் தப்பிச் சென்ற கும்பலை சேலத்தில் போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.
கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில் தனியார் நகைக்கடை இயங்கி வருகிறது. விடுமுறை தினமான நேற்று முன்தினம், வாடிக்கையாளர் அவசரமாக நகை வாங்க வேண்டும் என்று உரிமையாளரை தொடர்பு கொண்டுள்ளார். கடை உரிமையாளர் தனது ஊழியர் சந்தோஷ் என்பவரிடம் கடை சாவியையும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மற்றொரு ஊழியர் அக்சய் படேலிடம், நகை வைக்கும் லாக்கர் சாவியையும் கொடுத்து அனுப்பியுள்ளார்.
வாடிக்கையாளர் நகைகளை பார்த்துக் கொண்டிருந்த போது, மேலும் நான்கு பேர் கடையில் இருந்தனர். கடையின் உள்ளே இருந்து முனகல் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து நகைக்கடை ஊழியர் அக்சய் படேலிடம், சத்தம் வருவது குறித்து வாடிக்கையாளர் விசாரித்துள்ளார்.
அப்போது திடீரென அக்சய் படேல் மற்றும் கடையில் இருந்த நால்வரும் நகை, பணத்துடன் வெளியேறி காரில் தப்பினர். அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் அருகில் உள்ள கடைக்காரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். கடை உரிமையாளர் மற்றும் அங்கிருந்தவர்கள் வந்து பார்த்த போது, கடைக்குள் ஊழியர் சந்தோஷ் கை, கால் கட்டப்பட்டு காயத்துடன் கிடந்தார். அவரை மீட்டு விசாரித்ததில், தன்னை தாக்கி, கட்டிப்போட்டுவிட்டு, கடை ஊழியர் அக்சய் படேல் மற்றும் கூட்டாளிகள் தங்க நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதாக தெரிவித்தார்.
கடையில் நான்கு கிலோ தங்கம், ரூ.30 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர் பத்தனம்திட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கேரள போலீஸார் பல மாவட்டங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட நிலையில், தமிழக காவல் அதிகாரிகளுக்கும் கொள்ளை சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.
சேலம் கொண்டலாம்பட்டி, உத்தமசோழபுரம் சாலையில் போலீஸார் 28-ம் தேதி நள்ளிரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியே வேகமாக வந்த காரை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த கார் சாலை தடுப்பு சுவரில் மோதி நின்றது. காரில் இருந்து ஒருவர் தப்பி ஓடினார். மற்ற 4 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், இவர்கள் கேரளாவில் நகைக் கடையில் கொள்ளையடித்தவர்கள் என்பது தெரியவந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தாதாசாஹிப் (23), கணபதி ஜாதவ் (28), ஆகாஷ்சுரேஷ் கரத் (28), பிரகாஷ் ஜாதவ் (28) என்பது தெரியவந்தது. தங்கம், நகையுடன் தப்பி ஓடிய நிதின் ஜாதவ் என்பவரை நெய்காரப்பட்டியில் சுடுகாட்டில் பதுங்கியிருந்த போது, போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து 3.5 கிலோ தங்கம் மற்றும் ரொக்கம் ரூ.13.10 லட்சம் பறிமுதல் செய்தனர்.
கேரள போலீஸிடம் ஒப்படைப்பு
கொள்ளை கும்பல் சிக்கியது குறித்து கேரள போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பத்தனம் திட்டா போலீஸார் நேற்று மாலை சேலம் வந்தனர். அவர்களிடம் பிடிபட்ட 5 பேர் மற்றும் தங்கம், ரொக்கப் பணம் ஆகியவற்றை சேலம் போலீஸார் ஒப்படைத்தனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, நகை, பணத்தை பறிமுதல் செய்த போலீஸாரை, சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் பாராட்டினார்.