

திருநெல்வேலி / சென்னை
திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி ஜே.கே.திரிபாதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அருகே உள்ள ரோஸ் நகரைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி(65). திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளரான இவர், திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் பெண் மேயராக கடந்த 1996 முதல் 2001 வரை பொறுப்பு வகித்தார். இவரது கணவர் முருக சங்கரன்(74), நெடுஞ்சாலைத் துறையில் உதவி இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
3 பேர் கொலை
கடந்த 23-ம் தேதி வீட்டில் இருந்த உமா மகேஸ்வரி, முருக சங்கரன், மேலப்பாளையம் ஆசிரியர் காலனி யைச் சேர்ந்த பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். உமா மகேஸ்வரி அணிந் திருந்த 20 பவுன் நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸார் ஆதாயக் கொலை என, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அரசியல் போட்டி, சொத்துப் பிரச்சினை உள்ளிட்டவை காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், சங்கரன்கோவிலைச் சேர்ந்த திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் தனது உறவினருக்கு எம்எல்ஏ சீட் வாங்கித் தருமாறு கேட்டு உமா மகேஸ்வரி, முருக சங்கரன் ஆகி யோரிடம் ரூ.50 லட்சம் கொடுத்ததாக வும் ஆனால், சீட் வாங்கித் தராத தோடு பணத்தையும் திருப்பிக் கொடுக் காததால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்ததாகவும் போலீ ஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மதுரையில் மகள் வீட்டில் தங்கியிருந்த சீனியம்மாளிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, தனக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் உடல் நிலை சரியில்லாததால் கடந்த 6 மாதங் களாக மகள் வீட்டில் தங்கியிருப்ப தாகவும் அவர் கூறினார். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத் தாமல் போலீஸார் திரும்பினர். இதுதவிர உமா மகேஸ்வரியின் உறவினர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற் பட்டோரிடம் விசாரணை நடத்தியும் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடி யாமல் போலீஸார் திணறி வந்தனர்.
துப்பு துலங்கியது
இந்நிலையில், உமா மகேஸ்வரியின் வீட்டருகே உள்ள ஒரு ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் மீண்டும் தீவிரமாக ஆய்வு செய்ததில், கொலை நடந்த அன்று அந்த வழியாக கார் ஒன்று 2 முறை வந்து சென்றது தெரிய வந்தது. இதனால் அந்த கார் மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது.
மேலும் அப்பகுதியில் உள்ள செல்போன் டவர் மூலம் எந்தெந்த எண்களுக்கு அழைப்புகள் வந்து சென்றுள்ளன என ஆய்வு செய்ததில், ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து நீண்ட நேரம் பேசப்பட்டுள்ளது தெரியவந்தது. இதை அடிப்படை யாக வைத்து விசாரணை நடத்தி யதில், அந்த செல்போன் எண்ணும், காரும் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் பயன்படுத்தியது தெரியவந்தது.
கூலிப்படைக்கு தொடர்பு
இதையடுத்து, மதுரையில் இருந்த கார்த்திகேயனை தனிப்படை போலீ ஸார் திருநெல்வேலிக்கு அழைத்து வந்தனர். அவரிடம், மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன், துணை ஆணை யர்கள் சரவணன், மகேஷ்குமார் மற்றும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கூலிப்படையைச் சேர்ந்த வர்களின் உதவியோடு உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயனை கைது செய்த போலீஸார், மேலும்2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தக் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசா ரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைவர் (டிஜிபி) ஜே.கே.திரிபாதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.