

புதுச்சேரி
கர்நாடகாவில் பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்துள்ளது மற்ற மாநிலங்களில் கட்சி தாவும் எம்எல்ஏக்களுக்கு ஒரு பாடமாக அமையும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் குபேர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (திங்கள்கிழமை) அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியதாவது:
"கர்நாடகாவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, பேரம் பேசுவது, ராஜினாமா செய்ய வைப்பது போன்ற செயல்கள் கர்நாடகத்தில் மட்டுமின்றி பல மாநிலங்களில் பாஜக செய்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக இதைத்தான் செய்துள்ளது.
குறிப்பாக, கோவாவில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இது நீண்டநாள் நீடிக்காது. கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களைப் பதவி நீக்கம் செய்து, சட்டப்பேரவைத் தலைவர் எடுத்துள்ள முடிவு இதர மாநிலங்களில் கட்சி தாவும் எம்எல்ஏக்களுக்கு ஒரு பாடம்.
மொத்த எம்எல்ஏக்களில் 3-ல் இரண்டு பங்கு மாறினால்தான் அங்கீகரிக்க முடியும். அதற்குக் கீழ் கட்சி மாறுவதும், ஒட்டுமொத்த எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராகச் செயல்படுவது தவறு என்பதும், அவ்வாறு செயல்பட்டால் பதவி போய்விடும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் சட்டப்பேரவைத் தலைவருக்கு உண்டு. இது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான். இது மற்ற மாநிலங்களில் கட்சி தாவ நினைக்கும் எம்எல்ஏக்களுக்கும் ஒரு பாடம்தான்.
யார் கட்சி தாவினாலும் பதவி போய்விடும். எந்தக் காலத்திலும் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்க மாட்டேன் என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். எனவே அவர் பாஜகவுக்கு ஆதரவு தரமாட்டார்".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
செ. ஞானபிரகாஷ்