மேட்டூர் அணை: கோப்புப்படம்
மேட்டூர் அணை: கோப்புப்படம்

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு; ஒகேனக்கலில் 7-வது நாளாக பரிசல் இயக்கத் தடை

Published on

சேலம்

மேட்டூர் அணை நீர்வரத்து 8,400 கன அடியாக அதிகரித்துள்ளதால்,  ஒகேனக்கலில் 7-வது நாளாக பரிசல் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, அந்த அணைகளில் இருந்து காவிரிக்கு 10,000 கன அடி வீதம் காவிரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

திறந்து விடப்படும் தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வருகிறது. ஒகேனக்கலில் கடந்த 3 நாட்களாக காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக உள்ளது. இதனால், ஒகேனக்கலில், இன்று (திங்கள்கிழமை) 7-வது நாளாக பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 8,200 கன அடியாக இருந்தநிலையில், இன்று நீர்வரத்து 8,400 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

நீர்திறப்பைக் காட்டிலும் நீர்வரத்து பலமடங்கு அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 44.22 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 45.33 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 14.99 டிஎம்சியாக உள்ளது. 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in