

முத்தலாக் மசோதாவில் மக்களவையில் ஒரு நிலைப்பாடும், மாநிலங்களவையில் ஒரு நிலைப்பாடும் எடுத்திருப்பது அதிமுகவில் இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று (திங்கள்கிழமை) காலை தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தமிழகத்தில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு உள்ளதா? இல்லையா? என்பதை சிறுபான்மையினர்தான் சொல்ல வேண்டும்.
மத்திய அரசு சார்பில் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்படும் நிதி திருப்பி அனுப்பி வைக்கப்படுவது தமிழக அரசின் கையாலாகாதத் தனத்தையே காட்டுகிறது.
சிலைக் கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். வேலூர் மக்களவைத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். முத்தலாக் மசோதாவில் மக்களவையில் ஒரு நிலைப்பாடும், மாநிலங்களவையில் ஒரு நிலைப்பாடும் எடுத்திருப்பது அதிமுகவில் இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது" என பல்வேறு பிரச்சினைகள் மீதான தனது கருத்துகளைத் தெரிவித்தார்.