அனுமதிக்கப்பட்ட அளவைவிட சென்னை மாநகரப் பகுதியில் காற்றுமாசு தொடர்ந்து அதிகரிப்பு: கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்படுவது எப்போது?

அனுமதிக்கப்பட்ட அளவைவிட சென்னை மாநகரப் பகுதியில் காற்றுமாசு தொடர்ந்து அதிகரிப்பு: கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்படுவது எப்போது?
Updated on
2 min read

சென்னை மாநகரப் பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக காற்று மாசுபட்டு வருகிறது. காற்று மாசு அளவை கண்காணிக்க தொடர் காண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்து ஓராண்டுக்குமேல் ஆகியும் இதுவரை நிறுவப்படவில்லை.

சென்னையில் மக்கள்தொகை பெருக்கம், வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, அதிக அளவிலான கட்டுமானப் பணிகள், மலைபோல குவியும் குப்பைகள் போன்றவற்றின் காரணமாக காற்று அதிக அளவில் மாசுபட்டு வருகிறது. டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற மாநகரங்களைவிட சென்னையில் காற்று அதிகம் மாசுபட்டிருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை மேற்கொண்ட தொடர் கண்காணிப்பில் இது தெரியவந்துள்ளது.

சென்னையில் தற்போது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் அடையாறு, கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், நுங்கம்பாக்கம், தியாகராய நகர் ஆகிய பகுதிகளில் வாரத்துக்கு 2 நாட்கள் காற்று மாசு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 264 பிஎம்10 (காற்றில் உள்ள துகள்களின் அளவு) பதிவாகியுள்ளது. அங்கு மற்ற மாதங்களில் பிஎம்10-ன் அளவு 214, 150, 155, 236 என இருந்தது. இதேபோல தியாகராயநகரில் அதிகபட்சமாக 143, அண்ணாநகரில் 246, கீழ்ப்பாக்கத்தில் 147 என பிஎம்10 அளவு பதிவாகியுள்ளது.

அனுமதிக்கப்பட்ட காற்று மாசுவின் அளவு 100 பிஎம்10 என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சென்னையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட இரு மடங்குக்கு மேல் காற்று மாசு உள்ளது. இந்த நிலை நீடித்தால் சென்னையில் வசிக்கும் அனைவரும் சுவாசக் கோளாறு மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்க்கு ஆளாவது நிச்சயம்.

வாரத்துக்கு 2 நாட்கள், ஒருநாளில் தொடர்ந்து 24 மணி நேரம் என்ற முறையில் மட்டுமே காற்று மாசு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதன் முடிவு 24 மணி நேரத்துக்கு பிறகே தெரியவரும். சென்னையில் காற்று மாசு ஏற்படும்போதே அதை கண்காணித்து தடுக்க 24 மணி நேர தொடர் காற்று கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் ஒரு நடமாடும் கண்காணிப்பு நிலையம் நிறுவப்படும் என அரசு அறிவித்திருந்தது.

கடந்த ஆண்டு ஜூனில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவில் பேசிய அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், ‘சென்னையில் ரூ.4 கோடி செலவில் பெருங்குடி, கொடுங்கையூர் மற்றும் ராயபுரம் ஆகிய இடங்களில் தொடர் காற்று கண்காணிப்பு நிலையங்களும் ஒரு நடமாடும் தொடர் காற்று கண்காணிப்பு நிலையமும் இந்த ஆண்டு அமைக்கப்படும். இதன்மூலம் சென்னை மாநகர காற்றின் தரம் உடனுக்குடன் கண்டறியப்படும்’’ என்றார். அமைச்சர் அறிவித்து ஓராண்டுக்குமேல் ஆகியும் இதுவரை இத்திட்டம் செயல்படுத்ப்படவில்லை.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய வட்டாரங்களில் கேட்டபோது, ‘‘தொடர் காற்று கண்காணிப்பு நிலையங்களை மாநகராட்சியுடன் இணைந்து நிறுவ வேண்டும். சில நிர்வாக சிக்கல் காரணமாக பணி தாமதமாகிறது. விரைவில் அந்த நிலையங்கள் நிறுவப்படும்’’ என தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in