Published : 29 Jul 2019 11:20 AM
Last Updated : 29 Jul 2019 11:20 AM

திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

திற்பரப்பு அருவியில் உற்சாகமாக செல்பி எடுக்கும் சிறுமிகள் | படம்: எல்.மோகன்.

திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீர் கொட்டும் நிலையில் விடுமுறை நாளான நேற்று அதிக அளவில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் தென்மேற்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மலையோரங்களில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் அணைகளுக்கு ஓரளவு நீர்வரத்து உள்ளது. பேச்சிப்பாறை அணையில் 4.30 அடி, பெருஞ்சாணி அணையில் 36.45 அடி தண்ணீர் உள்ளது. பாசனத்துக்காக பேச்சிப்பாறையில் இருந்து விநாடிக்கு 390 கனஅடி, பெருஞ்சாணியில் இருந்து 320 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. உள்வரத்தாக பேச்சிப்பாறைக்கு 316 கனஅடி, பெருஞ்சாணிக்கு 160 கனஅடி தண்ணீர் வருகிறது.

சாரல் மழை மற்றும் அணை களில் இருந்து வெளியேறும் தண்ணீரால் குமரி குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீர் கொட்டுகிறது.

இதனால் விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்று கிழமை களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் அங்கு குவிகின்றனர். நேற்று தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்து உற்சாகமாக குளித்தனர்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் அருவி பகுதியில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதுபோல் கன்னியாகுமரியிலும் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது வரிசை யில் நின்று படகு சவாரி செய்து விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை ஆர்வத்துடன் பார்த்தனர். குழந்தைகள் மற்றும் குடும்பத் துடன் வந்திருந்தவர்கள் முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயம், அஸ்தமன காட்சிகளை கண்டு களித்தனர்.

கன்னியாகுமரியை அடுத்துள்ள வட்டக்கோட்டை, மற்றும் பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரிகோட்டை, மாத்தூர் தொட்டிப்பாலம், சிதறால் மலை கோயில், குமரியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை பகுதி கள் என அனைத்து சுற்றுலா மையங் களிலும் நேற்று பயணிகள் கூட்டம் நிறைந்திருந்தது.

குற்றாலம் அருவிகளில் கூட்டம் அலைமோதல்

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நேற்று அலைமோதியது. அருவி களில் குறைவான தண்ணீர் விழுந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.

குற்றாலத்தில் கடந்த வாரம் பெய்த சாரல் மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மழை இல்லாததால் அருவிகளில் நீர் வரத்து குறைந்து வருகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் கூட்டம் அலைமோதியது. வரிசையில் நின்று குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

குற்றாலம் பிரதான அருவியில் ஆண்கள் வரிசை கார் நிறுத்துமிடம் வரையிலும், பெண்கள் வரிசை குற்றாலநாதர் கோயிலையும் தாண்டி கடைவீதி வரையிலும் நீண்டது. இதுபோல், ஐந்தருவியிலும் கார் நிறுத்துமிடத்தை யும் தாண்டி நீண்ட வரிசை காணப்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்து அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்தனர்.

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு நேற்று முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை அகஸ்தியர் அருவிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், அங்கு செல்ல முடியாதவர்களும் குற்றாலத்தில் குவிந்ததே கூட்டம் அலைமோத காரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x