Published : 29 Jul 2019 11:15 AM
Last Updated : 29 Jul 2019 11:15 AM

ஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி மீது வெறி; விவசாயி ஆள்வதைப் பொறுக்க முடியவில்லை: முதல்வர் பழனிசாமி விமர்சனம்

வேலூர்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி மீது வெறி என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

வேலூர் கே.வி.குப்பத்தில் இன்று (திங்கள்கிழமை) கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

"திமுக வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்ததால், நிறுத்தப்பட்டது வேலூர் மக்களவைத் தேர்தல். அதிமுகவால் அல்ல.பிரச்சாரத்தில் ஸ்டாலின் பச்சைப்பொய் பேசுகிறார். அதிமுக சதி செய்துவிட்டதாக கூறுகிறார். அதிமுக கூட்டணி வேட்பாளர் இடத்தில் ஏன் சோதனை நடத்தவில்லை என ஸ்டாலின் கேட்கிறார். எங்கு பணம் இருக்கிறதோ அங்குதானே சோதனை நடத்த முடியும்.

ஸ்டாலின் அதிமுக மீது வீண் பழி சுமத்துகிறார். நாங்களா திமுகவைக் காட்டிக்கொடுத்தோம். அவர்களுக்குள் இருக்கும் ஒருவரே திமுகவைக் காட்டிக் கொடுத்திருக்கலாம். தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு திமுக தான் காரணம். எல்லா ஆதாரங்களும் தேர்தல் ஆணையத்திடம் உள்ளன. தகுந்த நேரத்தில் மக்களிடம் அவை வெளிச்சம் போட்டுக் காட்டப்படும். 

கர்நாடகாவில் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இவர்களுடன் சேர்ந்து நின்றதால் அங்கேயும் ஆட்சி போய் விட்டது. அவ்வளவு ராசியானவர் ஸ்டாலின். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பொய்யை வாரி இறைத்தார். அதனையும் நம்பி மக்கள் வாக்களித்து விட்டனர். அவர் பொய்யைச் சொல்லிசொல்லி, மக்கள் அதனையே உண்மையாக நம்பியதால், ஏமாற்றி பெற்ற வெற்றிதான் இது. உண்மையான வெற்றி அல்ல. நாங்கள் மனசாட்சிப் படி தேர்தலைச் சந்தித்தோம். 

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

நான் ஒரு விவசாயி. இன்றும் விவசாயம் செய்கிறேன். விவசாயி நாட்டை ஆளக்கூடாதா? ஒரு சாதாரண விவசாயி ஆள்வதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எங்கள் ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, திமுக எம்எல்ஏ மேசை மீது ஏறி நடனம் ஆடினார். அராஜகம் செய்தனர்.

சட்டப்பேரவை சபாநாயகர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரையும் இருக்கையிலிருந்து கீழே தள்ளி, அந்த நாற்காலியில் அமர்ந்தனர். தாழ்த்தப்பட்ட ஒருவர் அந்த இருக்கையில் இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இத்தனையும் செய்துவிட்டு சட்டையைக் கிழித்துவிட்டு ஸ்டாலின் வந்தார். முதல்வர் நாற்காலி மீது ஸ்டாலினுக்கு அவ்வளவு வெறி. நாங்கள் பதவிக்காக வெறி பிடித்துத் திரியவில்லை. இவர்களிடம் நாட்டைக் கொடுத்தால் என்ன ஆகும்? ஒருபோதும் அதிமுக ஆட்சியை வீழ்த்த முடியாது. கட்சியை உடைக்க முடியாது.

அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சாதாரண குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாநிலங்களவையில் இடம் கொடுத்திருக்கிறோம். அவர்களுக்கு இடம் கொடுத்து அழகு பார்க்கும் இயக்கம் அதிமுக. இந்தத் தொகுதியில் வாரிசுதான் திமுக சார்பாகப் போட்டியிடுகிறது. ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி புறப்பட்டார். திமுகவில் வேறு யாரும் கண்ணுக்குத் தெரியவில்லையா? ஒருவர் கூட உழைத்தவர்கள் இல்லையா? சிறைக்குச் சென்றவர்கள் இல்லையா? ஏன் அவர் மகனுக்கு பட்டாபிஷேகம் செய்ய ஸ்டாலின் துடிக்கிறார்? திமுக குடும்பக் கட்சி. அதிமுகவுக்கு மக்கள் அனைவருமே குடும்பம் தான். உதயநிதிக்கு சட்டப்பேரவையிலேயே திமுகவினர் புகழ்பாடிக் கொண்டிருக்கின்றனர். 

விவசாயிகளுக்குத் தேவையானவற்றை அதிமுக அரசு செய்து தருகிறது. நீர் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறோம். தடுப்பணைகள் கட்ட 1,000 கோடி ஒதுக்கப்பட்டு 600 கோடிக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிமராமத்துப் பணிகள் விவசாயிகள் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. ஆனால், ஸ்டாலின் குளத்தில் மண் அள்ளிப் படம் காட்டுகிறார். இரண்டு குளங்களுக்குச் சென்றதுடன் முடிந்துவிட்டது. விவசாயிகளிடம் வரவேற்பு வந்தவுடன் அவரால் பொறுக்க முடியவில்லை. 100 நாள் வேலைத் திட்டம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 

13 பெரியதா? 9 பெரியதா? என சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியைக் குறிப்பிட்டு ஸ்டாலின் கேட்கிறார். ஒன்பது தான் பெரியது. நீதிக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி அது. 13 தொகுதிகளில் வெற்றி, பொய் வாக்குறுதிகளால் கிடைத்த வெற்றி. 

அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர் நன்றாக இயங்குகின்றன. ஆனால், திமுக கொடுத்த வண்ணத் தொலைக்காட்சி ஓட்டையாகி, வெடித்துவிட்டன"

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x