நாட்டிலேயே அதிக அளவு மின்னணு பணப் பரிமாற்றம் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்துக்கு 4-வது இடம்: கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி முதல் 3 இடங்களை பிடித்தன

நாட்டிலேயே அதிக அளவு மின்னணு பணப் பரிமாற்றம் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்துக்கு 4-வது இடம்: கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி முதல் 3 இடங்களை பிடித்தன
Updated on
2 min read

சென்னை

நாட்டிலேயே அதிக அளவு மின்னணு பணப் பரிமாற்றம் செய்யும் மாநிலங்களின் பட்டி யலில் தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் மூன்று இடங்களை முறையே கர்நாடகா, மகாராஷ்டிர, டெல்லி ஆகியவை பிடித்துள்ளன.

மத்திய அரசு கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிப் பதற்காக, கடந்த 2016 நவ. 8-ம் தேதி பணமதிப்பு நீக்கத்தை அறி வித்தது. அதன்படி, புழக்கத்தில் இருந்து வந்த ரூ.500, 1,000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு அதற்கு பதிலாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பிறகு, ரொக்கப் பணத்தை பொதுமக்கள் கையாளுவதற்கு பதிலாக மின்னணு (டிஜிட்டல்) பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க மத்திய அரசு தீர்மானித்தது.

மின்னணு முறையில் பணம் செலுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையில், பண ஊக்கத்தொகை அறிவிப்பு, அதிர்ஷ்டசாலி குடிமக் கள் திட்டம், டிஜிட்டல் முறையிலான வர்த்தகர்கள் ஊக்கத் திட்டம் உள் ளிட்ட திட்டங்களை அறிவித்தது. மேலும், டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்வதற்காக, கடந்த 2017 ஏப்ரல் 14-ம் தேதி பீம் செய லியை மத்திய அரசு அறிமுகப் படுத்தியது.

மேலும் அனைத்துக் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துவதற்காக கையடக்க கருவிகள் (ஸ்வைப்பிங் மெஷின்) அறிமுகப்படுத்தப்பட்டன.

பேடிஎம், கூகுள்பே

இவை தவிர, பேடிஎம், கூகுள்பே உள்ளிட்ட பல்வேறு இ-வேலட்டுகள் மூலமாகவும் பணப் பரிவர்த்தனை தற்போது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, மின்னணு பணப் பரிமாற்றம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, பொதுத்துறை வங்கி அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டில் கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணப் புழக்கம் அதிகரித்தது. தீவிரவாத செயல் களுக்கு இப்பணம் பயன்படுத் தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப் பட்டதை அடுத்து, மத்திய அரசு பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தது. அதன் பிறகு, மின்னணுப் பணப் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தத் தொடங்கியது.

2017-18-ம் நிதி ஆண்டில் 2,070 கோடி மின்னணு பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. 2018-19-ம் நிதி ஆண்டில் சுமார் 3,133 கோடி மின்னணு பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட சுமார் 51 சதவீதம் அதிகம் ஆகும். நடப்பு 2019-20-ம் நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாத்தில் மட்டும் நாடு முழுவதும் 313 கோடி மின்னணு பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

கர்நாடகாவுக்கு முதலிடம்

இந்நிலையில், நாட்டிலேயே அதிக அளவு மின்னணு பணப் பரிமாற்றம் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 925 கோடி மின்னணு பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. முதலி டத்தை கர்நாடகாவும் (1,530 கோடி), 2-ம் இடத்தை மகாராஷ்டிர மாநிலமும் (1340 கோடி), 3-ம் இடத்தை டெல்லியும் (1,110 கோடி யும்), 5-ம் இடத்தை ஆந்திராவும் (890 கோடி) பிடித்துள்ளன.

தமிழகத்தில் அதுவும் குறிப்பாக, சென்னை, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய நகரங்களில் அதிக அளவில் மின்னணு பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக, இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் 10,837 பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளின் கிளைகள் உள்ளன. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, சுமார் 3.50 கோடி வங்கிக் கணக்கு கள் உள்ளன. அதில், 95 சதவீதத் துக்கும் மேற்பட்டோர் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்து கின்றனர்.

மேலும், ஆன்லைன் மற்றும் செயலிகள் மூலம் பணப் பரிவர்த் தனை மேற்கொள்ளுதலும் அதிக ரித்து வருகிறது. மின்னணு முறை யில் பணப் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாகவும், விரைவாகவும் செய்ய முடிவதால் நேரமும், வேலையும் மிச்சமாகிறது. எனவே, பொதுமக்கள் மின்னணுப் பரிவர்த்தனையை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தமிழகம் இப்பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் வரும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

- ப.முரளிதரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in