Published : 29 Jul 2019 07:18 AM
Last Updated : 29 Jul 2019 07:18 AM

விடுமுறை தினமானதால் காஞ்சியில் குவிந்தது கூட்டம்: அத்திவரதரை 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் - வெளியூர் வாகனங்கள் நகருக்கு வெளியே நிறுத்தப்பட்டன

விடுமுறை நாளான நேற்று சுமார் 3 லட்சம் பேர் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்தனர்.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நகருக்கு வெளியே வாகனங்களை நிறுத்தி சிறுக, சிறுக போலீஸார் அனுமதித்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. கடந்த 28 நாட்களில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். நேற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலை முதலே ஆயிரக் கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து வரிசையில் காத்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பிற்பகல் 12 மணி நிலவரப்படி சுமார் 3 லட்சம் பேர் நகருக்குள் வந்தனர்.

மேலும், இவர்களின் ஆயிரக் கணக்கான வாகனங்களால் வாகன நிறுத்தும் இடங்கள் நிறைந்தன. இதனால், நகரப் பகுதியில் இருந்து வெளியே செல்லும் சாலை மற்றும் உள்ளே வரும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக நகருக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படாமல், ஐய்யம்பேட்டை, செவிலிமேடு, ஓரிக்கை, ஒலிமுகம்மதுபேட்டை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

மேலும், நகருக்குள் இருக்கும் வாகனங்கள் வெளியே சென்றபின், பகுதிவாரியாக வாகனங்களை போலீஸார் உள்ளே அனுமதித்தனர். இதனால், சுவாமி தரிசனத்துக்கு வந்த நபர்கள் போலீஸாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 3 மணி வரையில் நகருக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. செட்டித் தெரு, பிஎம்எஸ் பள்ளி தெரு, ரங்கசாமி குளம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் கோயிலுக்கு செல்லும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஆயிரம், ஆயிரம் பேராக பிரித்து கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் நிலைமை கட்டுக்குள் வந்ததது.

காஞ்சி நகர எல்லையில் நிறுத் தப்பட்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் ஒலி பெருக்கி மூலம் பேசிய போலீஸார், ஞாயிற்றுக்கிழமை என்பதால் தரிசனத்துக்காக லட்சக்கணக் கானோர் வந்துள்ளனர். எனவே, வேறு ஒருநாள் தரிசனத்துக்கு வாருங்கள் அல்லது நகருக்கு வெளியே தங்கி நிதானமாக சுவாமி தரிசனம் செய்யுங்கள் என கெஞ்சினர். இதில், விஐபி அடை யாள அட்டை ஒட்டிய நபர்கள், போலீஸாரிடம் வாக்குவாதம் செய் தனர். அப்போது உள்ளூர் மக்கள் போலீஸாருக்கு ஆதரவாக செயல் பட்டு அவர்களை சமாதானப் படுத்தியதை காண முடிந்தது.

27 பேர் மயக்கம்

கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் மயக்கமடைந்தனர். அவர்களை மருத்துவக் குழுவினர் மற்றும் போலீஸார் மீட்டு முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி, சிகிச்சை அளித்தனர். அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் நகருக்குள் நுழைந்ததால், சுகாதார சீர்கேடு ஏற்பாடமல் இருப்பதற்காக சுகாதாரத் துறை சார்பில் எலுமிச்சை சாறு கலந்த 400 லிட்டர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

திருப்பி அனுப்பவில்லை

அத்திவரதரை தரிசக்க வரும் பக்தர்களை போலீஸார் திருப்பி அனுப்புவதாக தகவல் பரவியதை தொடர்ந்து, ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

அவர் கூறும்போது, "சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்களை திருப்பி அனுப்பவில்லை. நகருக்குள் கட்டுக்கடங்காத வகையில், வெளியூர் பக்தர்கள் கூட்டம் இருப்பதால், நெரிசலை தவிர்ப்பதற்காக அவர்கள் வெளியேறிய பின்னர், அனுமதிக் கப்படுவீர்கள் என்று தெரிவித்தனர். தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்.

மேலும், பக்தர்களின் வசதிக்காக கூடுதல் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த நபர்களுக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று ஆட்சியர் பொன்னையா தெரிவித் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x