

சென்னை வடபழனி பணிமனையில் நிகழ்ந்த விபத்தில் 2 ஊழியர்கள் பலியாக 5 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர், இதற்கு உரிய பராமரிப்புப் பணிகள் இல்லாததே காரணம் என்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் சாடியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“பொதுவாகவே பணிமனை என்பது எல்லா இடங்களிலும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் எந்த விதப் பராமரிப்பு பணிகளும் செய்யப்படவில்லை. அதுதான் இந்த விபத்திற்குக் காரணம்.
ஆகவே அரசாங்கம் கூடுதல் பொறுப்புணர்வை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு இடத்தைக் கட்டியவுடன் பணி முடிந்து விட்டது என்று கருதக்கூடாது. நாம் ஏரிகளிலிருந்து குளங்கள் வரை நாம் இதைத்தான் வலியுறுத்தி வருகிறோம்.
ஆகவே இந்தப் பணிமனையும் சரியாகப் பராமரிக்கப் பட்டிருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நினைத்துப் பாருங்கள். ஆகவே இது குறித்து அரசு கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை கண்டிப்பாக உடனடியாக வழங்கப்பட வேண்டும்” என்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.