

சத்தியமங்கலம் வனப்பகுதியில் இறந்த கிடந்த பெண் யானையின் அருகே அதன் குட்டி நாள் முழுவதும் சுற்றியபடி இருந்தது, காண்போரின் கண்களை குளமாக்கியது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத் திற்குட்பட்ட கடம்பூர் வனச்சரகம் நகலூர் வனப்பகுதியில் வனச்சரகர் வெங்கடாசலம் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நகலூர் கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதைக்கண்ட வனத்துறையினர் உடனடியாக சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் அருண் லாலுக்கு தகவல் தெரிவித்தனர்.
இறந்த பெண் யானையின் உடல் அருகே குட்டியானை ஒன்று சுற்றி வந்துகொண்டு இருந்தது. வனத் துறை ஊழியர்கள் குட்டி யானையை அங்கிருந்து அகற்றி இறந்து கிடந்த யானை அருகே செல்ல முயன்றனர். எனினும், குட்டி யானை அவர்களை அருகில் வர விடாமல் விரட்டியது. நாள் முழுவதும் குட்டி யானை இறந்து கிடந்த யானை அருகே நின்று கொண்டிருந்தது.
குட்டி யானையை அங்கிருந்து அப்புறப்படுத்திய வனத்துறையினர், இறந்து கிடந்த யானையை கால்நடை மருத்துவர்களைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்தனர். இதில், யானை குடற்புழு நோய் தாக்கி இறந்தது தெரியவந்தது. தாயை விட்டுப் பிரிய மனமில்லாத குட்டி யானை நாள் முழுவதும் தாயை சுற்றி வலம் வந்தது காண்போரின் கண்களை குளமாக்கியது.