

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 4-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்தில் அவரது மூத்த சகோதரர் முத்துமீரா லெப்பை மரைக்காயர், மகன் ஜெயினுலாபுதின், ஷேக் தாவூத், ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.
ஆட்சியர் கொ.வீரராகவராவ், ராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
100 கோடி மக்களும், ஆளுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். அப்படி வளர்த்தால், நாட்டின் தட்ப வெப்ப நிலையே மாறி, உலகுக்கே வழிகாட்டியாக இந்தியா மாறும் என்று அப்துல் கலாம் கூறிவந் தார்.
இதன்படி, கலாம் குடும்பத்தினர் நடத்திவரும் ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, மரங்கள் நடுவதை இயக்கமாக நடத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் அப்துல் கலாம் சமுதாயக் காடுகள் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், கலாம் நினைவிடத்தில் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கலாம் குடும்பத்தினர் முன்னிலை வகித்தனர்.
இத்திட்டம் மூலம் அந்தந்த மாவட்டத்தில் நன்கு வளரக்கூடிய மரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் பனை மரங்களை நட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மரம் வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய 250 மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.