Published : 27 Jul 2019 08:55 PM
Last Updated : 27 Jul 2019 08:55 PM

மாணவர்களின் சூப்பர் ஸ்டார் அப்துல் கலாம்: 1000 மரக்கன்றுகள் நடும் விழாவில் விவேக் பேச்சு

 சென்னை

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சூப்பர் ஸ்டார் இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் நம் அப்துல் கலாம் ஐயா தான் என்று நடிகர் விவேக் பேசினார். 

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஈஷா பசுமை கரங்கள், பசுமை கலாம் அமைப்பு மற்றும் மாஃபா அறக்கட்டளை சார்பில் ஆவடி பருத்திப்பட்டு ஏரிக்கரையில் பறவைகளுக்காக 1,000 மரக் கன்றுகள் இன்று நடப்பட்டன.

‘பறவைகளுக்கு கிளை கொடுப்போம்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், நடிகர் விவேக், ஈஷா பசுமைப் பள்ளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, பொதுப் பணித் துறை செயற்பொறியாளர்பழனிசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.

விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில், “விடுமுறை நாளிலும் மரக்கன்றுகள் நடுவதற்காக பல்வேறு கல்லூரிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் இங்கு வந்துள்ளீர்கள். உங்களை நான் பாராட்டுகிறேன். மரம் நடுவதோடு நின்று விடாமல் இது என்னுடைய மரம் என்று கருதி நீங்கள் நட்ட மரத்தை நீங்களே பராமரிக்க முன்வர வேண்டும். ஏரிகளை மீட்டெடுக்கும் பணியில் மாணவர்களாகிய நீங்கள் ஒன்றிணைந்து களமிறங்க வேண்டும். அனைவரும் சேர்ந்து தோள் கொடுப்போம். பறவைகளுக்காக கிளை கொடுப்போம்” என்றார்.

நடிகர் விவேக் பேசுகையில், ''ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சூப்பர் ஸ்டார் இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் நம் அப்துல் கலாம் ஐயா தான். அவருடைய நினைவு நாளில் ஆவடியில் பறவைகளுக்காக 1,000 மரக்கன்றுகள் நடுவது மகிழ்ச்சியாக உள்ளது.

அரிவாளும் பட்டாக்கத்தியும் எடுத்து திரிபவர்கள் எல்லாம் மாணவர்கள் கிடையாது. கடும் வெயிலும் சுற்றுச்சூழலுக்காக மரக் கன்றுகளை நடுவதற்கு கடப்பாரை பிடிக்கும் நீங்கள் தான் உண்மையான மாணவர்கள். நீங்கள் தான் நாட்டின் எதிர்காலம்'' என்றார் விவேக். 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x