புதுச்சேரியில் மதுபான விலை உயர்வு: மதுபானங்கள் ரூ. 2 முதல் ரூ. 50 வரை அதிகரிக்கும்; பீர் விலை ரூ.10 வரை உயரும்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

புதுச்சேரி

அமைச்சரவை முடிவுப்படி கூடுதல் கலால் வரி விதிக்கப்பட்டு அரசாணை வெளியாவதால் புதுச்சேரியில் மதுபான விலை உயர்கிறது. மதுபானங்கள் ரூ.2 முதல் ரூ.50 வரையிலும் பீர் விலை ரூ.10 வரையும் அதிகரிக்கும்.  கடைகளில் உள்ள கையிருப்பு ஓரிரு நாட்கள் விற்றவுடன் புதிய சரக்குகள் கொள்முதலில் இருந்து இது நடைமுறைக்கு வருகிறது.

புதுச்சேரி கடும் நிதி நெருக்கடியில் இருந்து வருவதால் வருவாயை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  புதுச்சேரியில் 450-க்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள், 96 சாராயக்கடைகள், 75 கள்ளுக்கடைகள் உள்ளன. புதுச்சேரியில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், ஓட்கா என மொத்தம் 1300க்கும் மேற்பட்ட மதுவகைகள் விற்பனையாகின்றன. 2017க்கு பிறகு புதுச்சேரி அரசு கலால் துறை, திடீரென்று கலால் வரியை நடப்பாண்டு பிப்ரவரியில் உயர்த்தியது.

புதுச்சேரியில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகளுக்கு 2 முதல் 3 ரூபாய் வரை விலையை உயர்த்தி, வரி வருவாயை பெருக்க இம்மாத தொடக்கத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது . தற்போது இவ்விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.  இதற்கான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி புதுவையில் மதுபான வகைகள், பீர் விலை உயர்கின்றன.

குறைந்த, சாதாரண ரக மதுபானங்களுக்கு குவார்ட்டருக்கு ரூ.2 முதல் ரூ.12.50 வரையிலும், நடுத்தர, உயர்தர மதுபானங்களுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரையிலும் விலை உயரும்.  இதேபோல கலால் வரி உயர்த்தப்பட்டதால் பீர் விலையும் உயரும். அதிகபட்சமாக ரூ.10 வரை பீர் விலை உயர்கிறது. ஏற்கெனவே மதுபான விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ள சரக்குகள் விலை உயர்த்தப்படவில்லை. 

இந்த விலை உயர்வு இனிமேல் புதிதாகக் கொள்முதல் செய்யப்படும் சரக்குகளில் இருந்து நடைமுறைக்கு வரும். இதனால் இருப்பில் உள்ள சரக்குகள் ஒரு சில நாட்கள் விற்பனைக்கு இருக்கும். முழுவதுமாக வரும் 1-ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. கலால் வரி, கூடுதல் கலால் வரி விதிப்பால் அரசுக்கு ரூ.117 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என கலால்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- செ.ஞானபிரகாஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in