

ராமேசுவரம்
கலாமின் நான்காவது நினைவு தினத்திலேயே மாநில அரசும், மத்திய அரசும் அப்துல் கலாமைப் புறக்கணித்துள்ளன என்று பொன்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நான்காம் நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 27.07.2015 அன்று மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவில் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உயிரிழந்தார். கலாமின் உடல் அவர் பிறந்த ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட தேசிய நினைவகத்தை கடந்த 27.07.2017 அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ராமேசுவரத்தில் உள்ள பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிடத்தில் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரா லெப்பை மரைக்காயர், மகன் ஜெயினுலாபுதின், ஷேக் தாவூத், ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ், ராமநாதபுரம் சரக புதிய காவல்துறை துணைத் தலைவர் ரூபேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு பேக்கரும்பில் உள்ள கலாம் தேசிய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கூறுகையில், ''மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் உறுதிமொழி எடுத்துச் செல்கின்றனர். ஆனால் தமிழக அரசிலிருந்தும், மத்திய அரசியிலிருந்தும் ஒரு அரசுப் பிரதிநிதி கூட இந்த விழாவிற்கு வரவில்லை. கலாமின் நான்காவது நினைவு தினத்திலேயே மாநில அரசும், மத்திய அரசும் அப்துல் கலாமைப் புறக்கணித்துள்ளன. அப்துல் கலாமின் நினைவு தினத்தை அரசு விழாவாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்து இனிவரும் ஆண்டுகளில் நடத்த வேண்டும்'' என்றார்.
கலாம் நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் தலைவரும், திருவாடனை சட்டப்பேரவை உறுப்பினரும் நடிகருமாண கருணாஸ் சனிக்கிழமை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''இளைஞர்களின் கனவு நாயகனாக விளங்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா” டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அறிவியல் துறையில் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி நமது தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். ஆனால், அப்துல் கலாமின் நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு வந்து மத்திய, மாநில அரசு சார்பில் யாரும் வராதது வருத்தம் அளிக்கிறது. கலாம் நினைவு நாளை அரசு விழாவாக மத்திய, மாநில அரசுகள் நடத்துவதே கலாமிற்கு நாம் செய்யும் மரியாதை'' எனத் தெரிவித்தார்.
ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச பவுண்டேஷன் சார்பாக ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் அப்துல் கலாம் சமுதாயக் காடுகள் திட்டத்தை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவராவ் தொடங்கி வைத்தார். கலாம் குடும்பத்தினர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.
இத்திட்டத்தின் மூலம் அந்ததந்த மாவட்டத்தில் நன்கு வளரக்கூடிய மரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அப்துல் கலாம் சமுதாயக் காடுகள் திட்டத்தின் மூலம் அதிக அளவில் பனை மரங்களை நட உள்ளதாக ஆட்சியர் கொ. வீரராகவராவ் தெரிவித்தார்.
-எஸ். முஹம்மது ராஃபி