சமஸ்கிருதம் தொன்மையானதா?- வரலாற்றைத் திருத்தும் மோசமான செயல்: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு 

உதகையில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்த ஜி.ராமகிருஷ்ணன்
உதகையில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்த ஜி.ராமகிருஷ்ணன்
Updated on
2 min read

உதகை

12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என அச்சிடப்பட்டுள்ளது வரலாற்றைத் திருத்தும் மோசமான செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்திய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உதகையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''நீலகிரி மாவட்டத்தில டான் டீ கட்டுப்பாட்டில் உள்ள 278 ஹெக்டேர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க டான் டீ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.

இதனைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி, சேரங்கோடு டான் டீ அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். நீலகிரி மாவட்டத்தில் குறைந்த மாணவர்கள் வருகையைக் காரணம் காட்டி 7 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இப்பள்ளிகளை அரசு மீண்டும் திறக்க வேண்டும்.

உதகையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். தொடர்ந்து மாவட்டத்தில் வன விலங்குகள் தாக்கி மனித உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க வனத்துறையினர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் 60 இடங்களில் பல்வேறு இயக்கங்களை நடத்த மாவட்டக் குழு கூட்டம் முடிவு செய்துள்ளது. 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என அச்சிடப்பட்டுள்ளது. இது வரலாற்றைத் திருத்தும் மோசமான செயலாகும்.

இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தியைத் திணிப்பதற்காக, மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கையைக் கொண்டு வர முயற்சிக்கிறது. பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இரு மொழி கொள்கை மட்டுமே உள்ளது. மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும். கஸ்தூரி ரங்கன் அறிக்கையை நிராகரிக்க வேண்டும். 

பாஜக, கோவா மற்றும் கர்நாடகாவில் உள்ள எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடித்துள்ளது. இது ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசு பல்வேறு மசோதாக்களை அவசர கதியில் நிறைவேற்றி வருகிறது. அருவங்காடு தொழிற்சாலை போன்ற பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் தொழிற்சாலைகளை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது.

விரைவில் தனியார் மயமாக்கவே இந்த நடவடிக்கையைப் பின்பற்றுகிறது. கடந்த வாஜ்பாய் ஆட்சியின் போது பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூன்றாகப் பிரித்ததன் விளைவாக தற்போது நஷ்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. என்ஐஏ சட்டத்தில் திருத்தம் செய்து அவசர கதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு விரோதமாக உள்ளது. 

நாட்டின் பாதுகாப்பை முன்னிறுத்தி சட்டத்தை நிறைவேற்றியுள்ள நிலையில், பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருவது முரணாக உள்ளது. பொருளாதார அடிப்படையில் 10 சதவீதம் இட ஓதுக்கீட்டில் வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சம் என்பது மிக அதிகம். இச்சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம்’’. 

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கையெழுத்து இயக்கத்தை ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், ஆர்.பத்ரி மற்றும் வாசு ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஆர்.டி.சிவசங்கர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in