

ஆர்.டி.சிவசங்கர்
அணு மின் நிலையங்களை மூட வேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்துத் தொடர்ந்து இயக்கலாம் என இந்திய அணுசக்தி கழக முன்னாள் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் டிகே.பட்டாம்மாள் குறித்து சாந்தா தியாகராஜன் எழுதிய புத்தகத்தை இந்திய அணுசக்தி கழக முன்னாள் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் இன்று (ஜூன் 27) வெளியிட்டார். முதல் பிரதியை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பெற்றுக்கொண்டார். பின்னர், இந்திய அணுசக்தி கழக முன்னாள் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. இந்த அணு மின் நிலையத்தின் 3 மற்றும் 4-ம் அலகு பணிகள் நடந்து வருகின்றன. 5 மற்றும் 6 அலகுகள் பணிகள் தொடங்கியுள்ளன. அனைத்து அலகு பணிகளும் நிறைவடைந்ததும் 6000 மெகா வாட்ஸ் மின் உற்பத்தி செய்யப்படும். தமிழகத்தில் அணுக் கழிவு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணு கழிவுகள் பாதுகாப்பாக வைக்கப்படும். இதனால், எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
அணு மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளிலிருந்து எரிபொருள் பிரிக்கப்பட்டு, மறு சுழற்சி செய்யபடும். மீதமுள்ள கழிவுகள், கற்கள் வடிவில் இருக்கும். இவை பெட்டிகளில் அடைக்கப்பட்டு, குளிரூட்டப்பட்டு, பாதுகாப்பாக மையத்தில் வைக்கப்படும். இந்த கழிவினால் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.
இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உட்பட பிற மாநிலங்களில் 10 அணு மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவை பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளுடன் இணைந்து அமைக்கப்படும். ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் அணு மின் நிலையங்களை மூடுவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில், அணு மின் நிலையங்களை மூட வேண்டிய அவசியம் இல்லை. அவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்படும்.
நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவின் வட்டப் பாதையில் நுழைந்துள்ளது. சந்திரனின் தன்மை, தண்ணீர் உள்ளதா? என்பதை ஆய்வு செய்யும். ரோவர் வாகனம் மாதிரிகளை சேகரித்து, தகவல்களை இஸ்ரோவுக்கு அனுப்பும்”.
இவ்வாறு தெரிவித்தார் சீனிவாசன்.