

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளில் 60 சதவீதம் அதிக வேகம் காரணமாக நிகழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் 80 கி.மீட்டர் வேகத்திலும், சக்கர வாகனங்கள் 60 கி.மீ. வேகத்திலும், 8-க்கும் அதிக இருக்கைகள் கொண்ட வாகனங்கள் 80 கி.மீட்டர் வேகத்திலும், 8-க்கும் குறைந்த இருக்கைகள் கொண்ட வாகனங் கள் 100 கி.மீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ் சாலைத்துறை 2014 ஆகஸ்ட் 5-ல் அறிவித்தது.
இந்த விதிகளை வாகன ஓட்டி கள் கடைபிடிப்பதில்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் 90 சதவீத வாகனங்கள் 100 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில்தான் பறக்கின்றன. இந்த வேகத்தில் வாகனங்கள் செல்லும்போது, சாலையின் எதிரே, குறுக்கே வரும் வாகனங்கள், மனிதர்களை, பொருள்களை கணிக்க முடியாத தால் கண்மூடி திறப்பதற்குள் விபத்துகள் நிகழ்ந்து விடுகின்றன.
மொத்த விபத்துகளில் 60 சதவீத விபத்துகள் அதிக வேகம் காரணமாக நிகழ்ந்துள்ளன. அதிக வேகம் காரணமாக இந்தியா முழுவதும் 2,11,252 விபத்துகளும், தமிழகத்தில் 21,609 விபத்துகளும், புதுச்சேரியில் 1,429 விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. இதில் தமிழகத்தில் 7,343 பேரும், புதுச்சேரியில் 227 பேரும் உயிரிழந்துள்ளனர்.
போதையில் வாகனம் ஓட்டிய தில் இந்தியாவில் 20,290 விபத்து களும், தமிழகத்தில் 2,764 விபத்துகளும் நடைபெற்றுள்ளன. போதை விபத்துகளில் தமிழகத்தில் 718 பேர் இறந்துள்ளனர்.
இது தொடர்பாக, மதுரை மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜே.கே.பாஸ்கரன் கூறியது:
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர் தனது கட்டுப் பாட்டை இழந்த நிலையில், எதிரே வாகனம் வரும்போது பிரேக் பிடிக்கலாமா அல்லது தப்பிக்கலாமா என்ற குழப்பத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் விபத்தில் சிக்கிவிடுவார். மிதமான 60 கி.மீட்டர் வேகத்திலேயே சென்றால், எதிரே வரும் வாகனங் கள், பொருள்களை உணர்ந்து, வாகனத்தின் வேகத்தை குறைக் கவோ அல்லது வேறு திசையில் வாகனத்தை திருப்பவோ போது மான நேரம் கிடைக்கும். இதனால் விபத்தை தவிர்க்க முடியும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் இடதுபுறம்தான் வாகனங்கள் செல்ல வேண்டும். பின்னால் அதிவேகத்தில் வரும் வாகனங்கள், முன்னால் செல்லும் வாகனத்தை வலதுபுறமாக முந்திச்சென்று உடன டியாக சாலையின் இடதுபுறத்துக்கு வந்துவிட வேண்டும். வாகனங்கள் சாலை பிரிப்பானை (சென்டர் மீடியன்) ஒட்டியே செல்லக்கூடாது. ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகள் மறுபுறத்திலிருந்து சென்டர் மீடியனை தாண்டி வரும்போது விபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
ஆண்டுதோறும் நடக்கும் விபத் துகளை கணக்கிட்டால் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவதால் நடக்கும் விபத்துகளே அதிகம். போதையில் வாகனம் ஓட்டுபவர் களால் நடக்கும் விபத்துகளை விட அதிவேக விபத்துகளே அதிக உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, மிதமான வேகம் மிக நன்று. இதை அனைத்து வாகன ஓட்டிகளும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
தமிழகம் முதலிடம்
விபத்துகள் தொடர்பாக, தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப் பட்டியலில், இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் 2010 முதல் 2013 வரை 5,79,141 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் அதிக விபத்துகள் நிகழும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்த 4 ஆண்டுகளில் 88,963 விபத்துகள் நடந்துள்ளன. இந்த 4 ஆண்டுகளில நடந்த விபத்துகளில் இந்தியாவில் 6,17,629 பேரும், தமிழகத்தில் 1,06,888 பேரும் காயமடைந்துள்ளனர். இந்தியாவில் 1,95,770 பேரும் தமிழகத்தில் 23,766 பேரும் பலியாகி உள்ளனர்.