

திருவள்ளூர்
அதிமுக அமைச்சர்கள் மழைநீர்ப்போன்று தூய்மையானவர்கள் என, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சிலைக்கடத்தலில் இரண்டு தமிழக அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என, சிலைக்கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல். சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் சிலைக்கடத்தல் விவகாரத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என விளக்கமளித்தனர்.
இதுதொடர்பாக இன்று (சனிக்கிழமை) திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், "இரண்டு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்திருப்பதாக, பல்வேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன. இரண்டு அமைச்சர்களுமே மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். இதில், உண்மையில்லை.பொய்யான கருத்துகள், வதந்திகள் இறக்கை கட்டிப் பறக்கிறது என்பதுதான் அதிமுகவின் கருத்து.
அதிமுக அமைச்சர்கள் உப்பைப் போன்று எளிமையானவர்கள். மழைநீரைப்போன்று தூய்மையானவர்கள். செம்மையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிற இந்த ஆட்சியின் மீது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பல்வேறு அவதூறுகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் இந்த அவதூறுகளைப் பொய்யென, தூள்தூளாக்கி நிரூபித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசும், அதிமுகவும்", என வைகைச்செல்வன் தெரிவித்தார்.