Published : 27 Jul 2019 12:35 PM
Last Updated : 27 Jul 2019 12:35 PM

அத்திவரதர் தரிசனம்: துணை ராணுவப் படைக்கு அவசியமில்லை; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

காஞ்சிபுரம்

அத்திவரதர் தரிசனத்திற்காக பாதுகாப்புக்கு துணை ராணுவம் வரவழைக்க வேண்டிய அவசியமில்லை என, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் அத்திவரதரை, ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன், தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் நேற்று (வெள்ளிக்கிழமை) தரிசனம் செய்தனர். வரதராஜ பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வைபவத்தின் 26-வது நாளில்  அத்திவரதர் இளஞ்சிவப்பு  நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன், வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வருகை தந்து அத்திவரதரை தரிசித்தார். திருப்பதி தேவஸ்தான இயக்குநர் அனில்குமார், வஸ்திரங்கள், குடைகள், சந்தனம் ஆகியவற்றை அளித்து, அத்திவரதரை தரிசனம் செய்தார். 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் அத்திவரதரை தரிசித்தார். தரிசனத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, "அதிகபட்சம் அரை மணிநேரம் அல்லது ஒரு மணிநேரத்தில் அத்திவரதரை தரிசித்துவிடலாம். மனிதநேயத்துடன் காவல்துறை நடந்துகொள்கிறது. இங்கு வேலை செய்யும் தேவஸ்தான பணியாளர்களும் மனிதநேயத்துடன் நடந்துகொள்கின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுக்கு இணங்க, தேவஸ்தானமும் காவல்துறையும் மற்ற அதிகாரிகளும் சிறப்பாக செயல்படுகின்றனர். அதனால், எந்தவித பிரச்சினைகளும் இல்லை. துணை ராணுவ வரவழைக்கும் அளவுக்கு தமிழகத்தின் நிலைமை இல்லை. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லா விதமான உதவிகளையும் தமிழக அரசு செய்திருக்கிறது", எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x