முத்தலாக் தடுப்பு மசோதா: அதிமுகவின் இருவேறு நிலைப்பாடு

ரவீந்தரநாத் குமார்- அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்
ரவீந்தரநாத் குமார்- அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

முத்தலாக் தடுப்பு மசோதாவில் அதிமுகவின் இருவேறு நிலைப்பாடு குறித்து குழப்பம் எழுந்துள்ளது.

முத்தலாக்கைப் பின்பற்றும் கணவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வழிசெய்யும் வகையிலான முத்தலாக் தடுப்பு மசோதா கடந்த வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, அம்மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, மக்களவை அதிமுக உறுப்பினர் ஓ.பி.ரவீந்தரநாத் குமார், இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் முத்தலாக் மசோதா விவகாரத்தில் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளதால், அம்மசோதா குறித்த அதிமுகவின் நிலைப்பாடு குறித்து குழப்பம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே முத்தலாக் தடுப்பு மசோதா குறித்து தெளிவான நிலைப்பாட்டை எடுத்தார். அதுதான் அதிமுகவின் நிலைப்பாடும் கூட.

அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. அனைத்துப் பெண்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் இம்மசோதாவுக்கு எங்களின் ஆதரவு உண்டு. அதேநேரத்தில் மசோதாவின் சில ஷரத்துகள் திருத்தப்பட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் எண்ணம். ஜெயலலிதா என்ன நிலைப்படு எடுத்தாரோ அதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இது உறுதி", என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

கடந்த மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதாவுக்கு மக்களவை அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பும் செய்தனர். முன்னாள் அதிமுக எம்.பி. அன்வர் ராஜா, இம்மசோதாவுக்கு தன் எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்துள்ளார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in