Published : 27 Jul 2019 10:53 AM
Last Updated : 27 Jul 2019 10:53 AM

தேனி மருத்துவக் கல்லூரி அம்மா உணவகத்தில் இட்லி விநியோகத்தை நிறுத்தியதால் நோயாளிகள் ஏமாற்றம்

என்.கணேஷ்ராஜ்

தேனி

தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அம்மா உண வகத்தில் இட்லி விநியோகம் நிறுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.மேலும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காதது உள்ளிட்ட பிரச்சினைகளால் உணவகச் செயல்பாடு தடுமாற்றத்தில் உள் ளது.

தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2016-ல் அம்மா உணவகம் தொடங்கப் பட்டது. இந்த உணவகத்தில் அமுதசுரபி குழுவைச் சேர்ந்த 12 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் ஆரவாரமாகத் தொடங்கப்பட்ட இந்த உணவகத்தை பின்னர் அரசு துறைகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் இருக்கும் பொருட்களை வைத்தே உணவகத்தை சிரமப்பட்டு நடத்தி வருகின்றனர். நீராவிக்கலன் இன்றி சாதாரண பாத்திரத்தில் இட்லி அவிப்பதால் கேஸ் விரைவில் தீர்ந்து விடுகிறது. இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்பதால் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் காலை உணவை நிறுத்திவிட்டனர். தயிர்சாதம், தக்காளி சாதம் என சமாளித்து வருகின்றனர்.

தினமும் ரூ. 1500-க்கு விற்பனை யாகிறது. இதில் சமையல் பொருட்களை வாங்கவே பணம் போதாததால் உணவகத்தை நடத்த மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இங்கு பணியாற்றும் பெண்கள் ஊதியம் கோரி மகளிர் திட்டம், ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம், திருமலாபுரம் ஊராட்சி, ஆட்சியர் அலுவலகம், அம்மா உணவக தலைமையகம் என பல இடங்களில் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் உணவகத்தின் கட்டமைப்பும் மோசமடைந்து வருகிறது. மேல்நிலை பிளாஸ்டிக் தொட்டி உடைந்து நீர் கசிந்து வருகிறது. இதனால் சமையல் பொருட்கள் நனைகின்றன. சேர் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. சர்க்கரை நோயாளிகள் அதிகம் இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர். எனவே இரவில் சப்பாத்தி வழங்கத் திட்டமிட்டாலும் அதை செயல்படுத்த முடியவில்லை.

இதுகுறித்து அம்மா உணவக ஊழியர்கள் முத்துலட்சுமி, மலர்விழி, நிர்மலா பாண்டீஸ்வரி, விஜயகுமாரி, தமிழ்ச்செல்வி ஆகியோர் கூறியதாவது : சிவகங்கை உள்ளிட்ட ஊர்களில் உள்ள அம்மா உணவகங்களில் தினமும் ரூ.250 சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், பல ஆண்டுகளாக இங்கு வெறுமனே பணி செய்து கொண்டிருக்கிறோம்.

அமுதசுரபி என்ற பெயரில் நாங்கள் நோயாளிகளின் பசியைப் போக்கி வருகிறோம். ஆனால், எங்கள் கோரிக்கைதான் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x