Published : 27 Jul 2019 10:45 AM
Last Updated : 27 Jul 2019 10:45 AM

இந்திய மருத்துவ கவுன்சிலின் காலக்கெடுவுக்குள் அரசு மருத்துவ கல்லூரி கட்டிட பணி முடியுமா?

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட்கள் 150-ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்ட நிலையில், அதற்கான கட்டமைப்பு வசதிகள், எம்சிஐ (இந்திய மருத்துவ கவுன்சில்) நிர்ணயித்த காலத்துக்குள் செய்யப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிக்கல்கள் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடக்கக் காலத்தில் 200 எம்பிபிஎஸ் சீட்கள் வரை இருந்தன. அதன்பிறகு 175 இடங்களாகவும், 155 இடங்களாகவும், கடந்த ஆண்டு 150 எம்பிபிஎஸ் ‘சீட்’களாகவும் குறைக்கப்பட்டன. இந்த ஆண்டு, பெரும் முயற்சிக்கும், போராட்டத்துக்கும் பிறகு 150-லிருந்து இருந்து 250 சீட்களாக உயர்த்தப்பட்டுள்ளன.

தற்போது 250 சீட்களுக்கு கவுன்சலிங் நடத்தப்பட்டது. இதில் மாநில இட ஒதுக்கீட்டில் 85 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டு மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ளது. அகில இந்திய இட ஒதுக்கீடு 15 சதவீதத்துக்கான இடங்களுக்கு கவுன்சலிங் நடக்கிறது. ஆக.1 முதல் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குகின்றன. ஆனால், மருத்துவக் கல்லூரியில் போதிய வகுப்பறை, ஆய்வுக்கூடம், விடுதி வசதிகள் இல்லாமல் உள்ளன.

கட்டமைப்பு வசதிகள் இல்லாத தாலேயே திருநெல்வேலிக்கு அறிவித்த பிறகு தாமதமாக ஒரு வாரம் கழித்து மதுரை அரசு மருத்துக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் கூடுதலாக 100 எம்பிபிஎஸ் சீட்களை அறிவித்தது.

இந்தத் தாமதத்தின் பின்னணி யில், மதுரை மருத்துவக் கல்லூரி யில் இந்திய மருத்துவக் கவுன்சில் சுட்டிக்காட்டிய கட்டமைப்பு வசதிகளை ஓராண்டுக்குள் நிறைவேற்றுவதாக தமிழக சுகாதாரத்துறை உறுதியளித் துள்ளது. ஆனால், கட்டுமானப் பணிகள் மந்தமாகவே நடக்கின்றன.

250 எம்பிபிஎஸ் மாணவர் களுக்கான நிர்வாகப் பணிகளுக்கு போதிய ஊழியர்கள் நியமிக்கப் படவில்லை. அதனால், இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயித்த காலத்துக்குள் கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றாவிட்டால் உயர்த்தப்பட்ட சீட்களை ரத்து செய்யவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவப் பேராசிரியர்கள் கூறியதாவது: ஏற்கெனவே இதேபோலத்தான் கட்டமைப்பு வசதிகள், போதிய மருத்துவ ஆசிரியர்கள் இன்றி மதுரை மருத்துவக் கல்லூரியில் 200 எம்பிபிஎஸ் சீட்களில் இருந்து 150 ஆக குறைந்தது. தற்போது இந்திய மருத்துவக் கவுன்சில் நிபந்தனை அடிப்படையில் 100 சீட் உயர்த்தியது. அவற்றை விரைவாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு உண்டு.

150 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு 152 மருத்துவர்கள் (பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள்) இருக்க வேண்டும். தற்போது கூடுதல் 100 எம்பிபிஎஸ் சீட்களுக்கும் சேர்த்து 250 பேருக்கு 278 மருத்துவ ஆசிரியர்கள் இருக்க வேண்டும். இதில், தற்போது ஓரளவு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டதால் 260 பேர் வரை இருக்கிறார்கள்.

10 சதவீத மருத்துவ ஆசிரியர்கள் குறைவானாலே இந்திய மருத்துவக் கவுன்சில் அடுத்த ஆய்வில் ஏற்றுக்கொள்ளாது. அதுபோல் வேலைப் பளுவுக்கு தகுந்தபடி நிர்வாகப் பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். இவர்கள் குறைவாகவே உள்ளனர். 32 வகுப்பறைகள், 2 தேர்வு அறைகள் இருக்க வேண்டும். ஆனால், 14 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. புதிதாக 18 வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. தேர்வு அறைகள் கூடுதலாகக் கட்டப்படுகின்றன. அதுபோல், கூடுதலாக ஆய்வக தொழில்நுட்பனர்கள், மருந்தாளுநர்களை நியமிக்க வேண்டும். இவை அனைத்தையும் இந்திய மருத்துவக் கவுன்சில் அடுத்த ஆய்வுக்கு வருவதற்குள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x