சம்பிரதாயமாக கொண்டாடப்படுகிறதா திருமூர்த்திமலை ஆடிப்பெருந் திருவிழா? 

சம்பிரதாயமாக கொண்டாடப்படுகிறதா திருமூர்த்திமலை ஆடிப்பெருந் திருவிழா? 
Updated on
2 min read

எம்.நாகராஜன்

சுற்றுலாப் பயணிகளின் மேம்பாட்டுக்கான எவ்விதத் திட்டமோ, நிதி ஒதுக்கீடோ இல்லாமல் திருமூர்த்திமலையில்  வெறுமனே சம்பிரதாயமாகக் கொண்டாடப்படும் ஆடிப்பெருந் திருவிழா மக்களிடையே வரவேற்பை இழந்து வருவதாக குற்றம் சுமத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, மேற்குத்  தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட திருமூர்த்தி  மலை, சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் ஆன்மிக, சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலாப்  பயணிகளுக்கு, பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும்,  திருமூர்த்தி அணைப் பகுதியில் பொழுதுபோக்கவும் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த  வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் ஆடி 18-ம் தேதி திருமூர்த்திமலையில் ஆடிப்பெருந் திருவிழா,  அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி,  வீட்டுமனைப்பட்டா, ரேஷன்கார்டு உள்பட அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக இது நிறைவடையும். ஒவ்வோர் ஆண்டும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் அமைச்சர்கள், திருமூர்த்திமலையில் சுற்றுலாவை மேம்படுத்த உரிய நிதி ஒதுக்கப்படும் என அறிவிப்பார்கள். ஆனால், இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.

மேலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்
கூட இதுவரை செயல்படுத்தப்படாதது சுற்றுலாப்  பயணிகளிடையே ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “வாகன  நிறுத்துமிட வசதி, கழிப்பறை, தகவல் மையம், தங்குமிடம் என எவ்வித அடிப்படை வசதிகளும் இங்கு கிடையாது. ஆனாலும், பசுமை போர்த்திய மலையின் இயற்கை அழகை ரசிக்கவும், அமணலிங்கேஸ்வரரை தரிசிக்கவும்  அதிக அளவில் சுற்றுலாப்  பயணிகள் வருகின்றனர்.

திருமூர்த்திமலையை சுற்றுலாத் தலமாக அறிவித்து, பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும்  பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக திருமூர்த்திமலையில் ஆடிப்பெருந் திருவிழா நடத்தப்படுகிறது. 2013-ல் நடந்த விழாவில், ‘திருமூர்த்திமலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த ரூ.1.48 கோடி  மதிப்பில் கருத்துரு தயாரிக்கப்பட்டு, அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நிதி பெறப்பட்டு, பணிகள் துவங்கும்’  என்று ஓர் அமைச்சர் தெரிவித்தார். ஆனால், நிதி ஒதுக்கீடு தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்புமே  வெளியாகவில்லை.

இதற்கிடையே, திருமூர்த்தி அணை அருகே, வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில், ரூ.85 லட்சம்  மதிப்பில் பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2016-ல் நடந்த விழாவில் தெரிவிக்கப்பட்டது. இதுவும் அறிவிப்புடன் சரி, இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால், திருமூர்த்தி மலைக்கு வரும் சுற்றுலாப்  பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வது தொடர்கதையாகிவிட்டது. 

கட்டமைப்பு வசதிகள் இல்லாத திருமூர்த்திமலையில், இந்த ஆண்டும் ஆடிப்பெருந் திருவிழா நடத்துவதற்கு, வருவாய்த் துறை தயாராகி வருகிறது. இந்த விழாவிலும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மேடையில் வழக்கமான வாக்குறுதிகளை அளிக்கலாம். அவையாவது, காகித அறிவிப்புகளாக இருக்கக் கூடாது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை முதலில் செயல்பாட்டுக்கு வர வேண்டும்” என்றனர்.
திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ள பகுதியில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. அங்கு,  பெண்கள் உடைமாற்றக்கூட வசதியில்லை. கழிப்பறை வசதியும் இல்லாததால், அவதிக்குள்ளாகின்றனர். 

அருவிக்கு செல்லும் பயணிகளிடம் இந்து சமய அறநிலையத் துறை கட்டணம் வசூலிக்கிறது. அறநிலையத் துறை மற்றும் வனத் துறை இடையே நிலவும் பனிப்போர்தான், அருவி அமைந்துள்ள வனப் பகுதியில் எவ்வித அடிப்படை திட்டங்களும் செயல்
படுத்த முடியாமல் தடுப்பதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறும்போது, “திருமூர்த்திமலையை சுற்றுலா தலமாக்குவதில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை ஆடிப்பெருந் திருவிழா நடத்துவதுடன் சரி. மற்ற பணிகளை கவனிக்க வேண்டியது சுற்றுலாத் துறை, அறநிலையத் துறை மற்றும் வனத் துறையின் பொறுப்பு. 

சிறப்பு அழைப்பாளர்கள் அறிவிக்கும் திட்டங்கள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவுபடியே இதுவரை இவ்விழா நடைபெற்று வருகிறது. முறையான அரசாணைகூட இல்லை. எனினும், இந்த ஆண்டுக்கான விழா நடத்துவது தொடர்பாக உயரதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in